ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Wednesday, September 8, 2010

கால்நடை மருத்துவருன்னா சும்மாவா...

மருத்துவக்கனவில் இருக்கும் என் உறவினரின் மக்ளுக்கு.சீட்  கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது...அடுத்து என்ன படிப்பது என்ற ஆலோசித்தோம்...அப்போது என் சினேகிதி கால்நடை மருத்துவம் படிக்கலாம்...என்றாள்..

”மாட்டு டாக்டருக்கா” என்று விளையாடுக்குக் கேட்டுவிட்டேன்.....அதென்ன அப்படி ஒரு இளக்காரம்....அவ்ங்களோட மதிப்பு தெரியுமா???....கிராமங்கள்ல்ல போய்ப்பாரு....அவங்களுக்கு இருக்கற மரியாதையை..விவசாயிகள் மனிதர்களைப்ப் போலவே கால்நடைகளையும் மிகவும் நேசிப்பார்கள்....கால்நடைகள் இறந்துவிட்டால் மனிதர்கள் இறந்தால் துக்கம் விசாரிப்பதுபோலவே துக்கம் விசாரிக்கும் பழக்கம் கிராமங்களில் உண்டு...அந்த வாயில்லா ஜீவன்களுக்கு வைத்தியம் பார்ப்பவரை கடவுளைப்போல மதிப்பார்கள்....தெரியுமா...

இங்க பாருடி....காலநடை மருத்துவம் படிச்சவர்தான் K.P.ராமலிங்கம் எம்.பி.....சுனாமி வந்தப்போ கடலூர் கலெக்டரா இருந்தாரே...ராதாகிருஸ்ணன்,I.A.S அப்புறம் எஙகூரு பக்கத்து பெருந்துரைக்காரரு  ராமசாமி..I.A.S இன்னும் எத்தனை ஐ.பி.எஸ் இருக்காங்க தெரியுமா...

ஹியூமன் டாக்டருக்கும், வெட்னரி டாக்டருக்கும் ஒரே மாதிரியான சம்பளம்தான்,..ஒரே கேடர்தான். தெரிஞ்சுக்க..


.பொரிந்து தள்ளிவிட்டாள் என் சினேகிதி..சட்டியில போட்டு வறுத்தெடுக்காத குறையா வறுத்தெடுத்துவிட்டாள்...ஏன்னாஅவங்க ஊட்டுக்காரரு வெட்னரி டாக்டர்...

இவளேதான் “ஒரு சினிமா பார்க்க முடியுதா....மாடு கன்னு போடுல,” “ நஞசு போடுல்லன்னு... தியேட்டர்லயே வந்து பாதியிலேயே கூட்டிட்ட்டுப்போய்டறாங்க”. அத்னாலே சினிமா பார்க்கறதேயே விட்டாச்சுன்னு” ..ன்னு செல்லமா அலுத்துக்குவா...

உண்மையில் எல்லோருமே கால்நடை மருத்துவப்(B.V.Sc.) படிப்பைப்ப்ற்றி ஒரு தவறான கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள்...அல்லது அதன் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள்..

கால்நடை மருத்துவம் படித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது...வேலைவாய்ப்பு இருக்கிறது...அரசு வேலை சீக்கிரம் கிடைக்கிறது...அப்படிக் கிடைக்கவில்லை என்றால் கூட தனியாக வைத்தியம் செய்யலாம்...அதிலேயே M.V.Sc...., Phd....போன்ற படிப்புகளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது...ஒரு சாப்ட்வேர் எஞ்சீனியர் வாங்கும் சம்பளத்தை அவ்ர்கள் உள்ளுரீலேயே பெறலாம்...வெளிநாட்டிலும் நல்ல வேலைவாய்ப்பு இருக்கிறது.....

அதிலும் இந்த்த்துறை பெண்களுக்கு மிகவும் ஏற்புடையது....ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்ட பெண் கால்நடை மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்.. சென்னையில எங்கள் தோழி ஒருவர் வெளியூரெல்லாம் விமானத்துல பறந்துபோய் வளர்ப்புப் பிராணிகளுக்கு வைத்தியம் பார்க்கிறார்....

அதுனாலே கால்நடை மருத்துவத்த மிஸ் ப்ண்ணீராதீங்க....இந்த வருடம் கவனத்துல வைங்க...

Sunday, September 5, 2010

ஈரோட்டுப் பெண்களின் அட்டகாசம்...

...

போனவாரம் ஞாயிற்றுக்கிழமை ”அவள்விகடன்” ” ஜாலிடே” ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடந்தது... இந்த மாதிரி விழாவில் நான் இப்போதுதான் முதன்முறையாகக் கலந்து கொண்டேன்...

 காலேஜ் புள்ளைகள்ல்ல இருந்து 70வயசு பாட்டி வரைக்கும் என்ன பாட்டு என்ன டான்சு...ஒரே அமர்க்களம்தான்..நமக்கெல்லாம் மனதளவில் ஒரு கட்டுப்பாட்டுடன் இருந்தே பழகிட்டோமா....அங்க அதெயெல்லம் தூக்கிப்போட்டுட்டு குழந்தைகள் மாதிரி ஆடலும் பாடலும் போட்டிகளும், பரிசுகளுமாக ஒரே சந்தோசம்தான்... ஜட்ஜுகளும் சேர்ந்து ஆடி கலக்கிட்டாஙக...அந்த சூழ்நிலையைப்பர்த்ததும் உண்மையில் எனக்கு  சந்தோசத்துல அழுகையே வந்திருச்சுங்க..

.தொகுப்பாளினி.”அபேக்சா”ன்னு பேர் சொன்னாங்க...பேர் ரொம்பவும் வித்தியாசமா இருக்கில்ல...செம கலக்கல்..தொய்வே இல்லாமல் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி கலகலப்பா வச்சுருந்தாங்க...

அவங்க சொன்னமாதிரியே “வீட்டுக்கவலையெல்லாம் தூக்கிபோட்டு, சமைக்காமல் உட்காரவச்சு லன்ஞ், ஐஸ்கீம், ஸ்நாகஸ்,, காபி,டீ...அட அட.. என்ன உபசரிப்புங்கறீங்க...காலேஞ் பொண்ணுக எல்லாம் தூள் கிளப்பிட்டாங்க...

நானும் ஒரு போட்டியில் இறுதிச்சுற்றுக்கு வந்து கடைசியில சொதப்பிட்டேன்...

எங்கூட்டூக்காரர் ”வாயெல்லாம் ”எங்கிட்டதான்...வெளியில் போனாத்தான தெரியும்” அப்படீன்னுவார்... நம்ம வீரமெல்லாம் மேடையப் பார்த்தா அப்படியே கரைஞ்சிடுது..மேடைபயம் இன்னும் இருக்கிறது...அடுத்த தடவை தோழிகளோடு போய் கலக்கிறலாம்...அப்படின்னு வேற வேலையா முடியறதுக்குள்ளேயே வந்துட்டேன்... 

அடுத்த விழா ஈரோட்டில எப்ப நடக்குமோ....நன்றி....அவள்விகடன்....சி.டி.கிடைச்சா நல்லாருக்கும்...

டிஸ்கி: நான் கலந்துகொண்டது” சவாலே சமாளி”.நிகழ்ச்சி...

கேள்வி: உங்கள் நாத்தனாருக்குத் தெரியக்கூடாத பயங்கர உண்மையை அவ்ர்களிடமே உளறிவிடுகிறீர்கள்....எப்படி சமாளிப்பீங்க.


நண்பர்களே...நீங்கள் சொல்லுங்க.. எப்படி சமாளிப்பீங்க...Thursday, August 26, 2010

தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடுங்கப்பா...

.
இப்பெல்லாம் எங்கு புறப்பட்டாலும் தண்ணீர் பாட்டில்கள் இல்லாமல் யாரும் கிளம்பறதில்லை....அந்தத்தண்ணீரை யாராவது தாகத்திற்கு கேட்டால்கூட கொஞசம் யோசனையோடு “15ரூபா போட்டு வாங்கிய “அக்வாபீனா”வாச்சே...காசு போட்டு வாங்கலாமில்ல...அல்பம்...அல்பம்...கேட்குதுபாருன்னு தயக்கத்துடன்தான் கொடுப்பாங்க.....நிலமை அப்படி ஆய்ப்போச்சு..

”தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே”...அப்படிம்பாங்க...

மணப்பெண் தேடுவதாக இருந்தாலும் “எதுவும் வேண்டாங்க.....யார் வந்தாலும் முகஞ்சுளிக்காம ஒரு சொம்பு தண்ணீ கொடுக்கிற புள்ளையாப் பாருங்க” என்பார்கள்..

அதெல்லாம் தமிழர் பண்பாடு...அதெல்லாம் மாறிபோச்சு....அந்தப்பண்பாடு, வெங்காயம் எல்லாம் இப்ப .நாம தண்ணி கொண்டுவந்து கொடுத்தாக்கூட “வேண்டாங்க்” என்கிறார்கள்....”சுடுதண்ணீர்தான்” என்று சொன்னபிறகு தயக்கத்துடன் குடிக்கிறார்கள்...

முக்காவாசிப்பேர் வீட்டுல கேன் தண்ணீர்தான்..

இனிமேல் வீட்டுபட்ஜெட்டில் தண்ணீருக்கும் காசு ஒதுக்கணும்போல..

காவிரியிலும் பிரச்சினை....மழையும் பெய்யமாட்டேங்குது....

இது எங்க போய் நிக்கப்போவுதோ...அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும்...என்கிறார்களே...அது நிஜமாகிவிடுமோ...

டிஸ்கி.:பத்து நாளாச்சு..பைப்புல தண்ணி வந்து.... அதனால் வந்த  புலம்பல்..இது.. .


Wednesday, August 18, 2010

திருடிகள் ஜாக்கிரதை....

அய்...விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு வந்திருச்சே...போன வாரம் ஈரோட்ல ஒரு வேலை...

எங்களுக்கு ஈரோடுதான் செல்லம்....சாப்பிங் ஆகட்டும்......ஆஸ்பிட்டல் ஆகட்டும்..எல்லாம் அங்கேதான்...போகும்போது ஒரு லிஸ்டே இருக்கும்..

அன்னிக்கும் அப்ப்டித்தான்...மிக்ஸி ரிப்பேருக்கு கொடுக்க கையில் கனத்துடன்...ஒரு பிக் சாப்பரில் உட்கார்ந்திருந்தது.....அதாங்க...கட்டப்பையின்னுவாங்களே அதுதான்..

அப்பத்தான் வூட்டுக்கடன் பணத்த வங்கியில கட்டிவிட்டு காலியான்..??? பெரிய கேஸ்பேக்கும் அதில் செலவுக்கு கொஞசம் பணம்...ஒரு செல்போன்..அவ்வள்வுதான் இருப்பு...

இரண்டு பெண்கள் பயர்சர்வீசில் ஏறினார்கள்...என்னருகே ஒருத்தி நின்று கொண்டாள்...என் பை இருவருக்கும் நடுவிலிருந்தது...ஏனோ சரியாக நிற்காமல் நெளிந்து கொண்டே இருந்தாள்...

பார்க் வருவத்ற்குள் ஏதோ சந்தேகத்தில் பையை திறந்துபார்த்தேன்..கேஸ்பேக் கானோம்...சந்தேகமே இல்லை....இவள்தான் காலாலேயே எத்தி எடுத்திருக்கிறாள் என்று பட்டது...

“ என் பேக காணொம்...நீதான் எடுத்திருக்கிறாய்....மரியாதையாக் குடுத்திரு” ...ன்னு சத்தம் போட்டேன்....

கண்டக்டர் எங்கள் இருவரையும் ஒருமுறை நிமிர்ந்துபார்த்துவிட்டு கடமையே கண்ணாக....???? டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்...

அவள் ”என்ன இந்தம்மா லூஸ் மாதிரி பேசுது”என்று யாரையோ பார்த்து சொன்னாள்....எனக்கு கோபம் வந்துவிட்டது.......நான் விடவில்லை...”நானாடி லூசு....வா போலீஸ் ஸ்டேசன் போகலாம்”எத்தனி பேருடி இருக்கிறீங்க பஸ்ஸுக்குள்ள” என்றேன்...

அவளையும், உடன் வந்தவளையும் புடைவையை உதறிக்காட்டச்சொன்னேன்.....ஒன்றும் இல்லை....இனி என்ன செய்வது....

“டிரைவர் வண்டியை ஸ்டேசன்ல நிறுத்துங்க...கண்டிப்பா என் பேக பஸ்ஸுக்குள்ளதான் இருக்குது யார்கிட்டயோ...”. 

அதில இப்பகட்டுன பேங்க ரசீது மட்டும்தான் இருக்குது.....பணமெல்லாம் இல்லை...செக் பண்ணிடலாம்” என்று சப்தம் போட்டேன்..

அமைதியோ அமைதி....இரண்டு நிமிடத்தில் நாலுசீட் பின்னால் இருந்த ஒரு பெண் சத்தம் போட்டார்...”ஒரு பேக் இங்க கிடக்குது....உங்களுதா பர்ருங்க”

என் பேக்கேதான்....எப்படி கை மாத்திருக்காங்காங்க..பாருங்க...பணம் ஒன்றும் இல்லை...என்றதும் கீழே வீசிட்டாங்க.....யோசித்துப்பார்த்தேன்...கிடைச்சுருச்சு...இனி என்னானு புகார் தருவது...

சாட்சி யாருன்னு கேட்பாங்களோ...ஒருத்தரும் வரமாட்டாங்க...பேக கிடைத்த நிம்மதியுடன் அமைதியாகிவிட்டேன்...அலட்டிக்காம அவங்களும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிப்போய்ட்டாங்க...

டிஸ்கி:...இதனால் தெரிந்துகொள்ளவேண்டிய நீதி என்னவென்றால் பிக் சாப்பரில் பர்ஸ் போன்ற பொருள்களை வைக்காதீங்க...பெண் திருடிகளும் நிறைய இருக்காங்க...அவங்க தனியா வரமாட்டாங்க.. எடுத்ததும் அடுத்த ஆளுக்கு கை மாத்திடறாங்க.. அது பஸ் ஆக இருந்ததாலும் நான் உடனே பார்த்துவிட்டதாலும் பரவாயில்லை...

இதுவே பொது இடங்கள் நெருக்கமான விழாக்கூட்டங்கள் போன்றவற்றில் நாம்தான் ஜாகிரதையாக இருக்கவேண்டும்..அடிக்கடி நம் நகைகள் கழுத்தில் இருக்கிறதா என்று செக் செய்யவேண்டும்...சிறு குழந்தைகளுக்கு நகைகள் அணிந்து எடுத்துச் செல்வதை தவிர்க்கவேண்டும்..

 பஸ்களில் இதுபோல் நடந்தால், .சந்தேகப்பட்டால் சும்மாவாச்சும் போலீஸ்....போலீஸ் என்று கூவுங்கள்...நிஜமாவே அவங்க திருடவில்லை என்றால் என்ன உண்டு இல்லை என்று பண்ணியிருப்பாங்கதானே...மொசப்புடிக்கிற நாய மூஞ்சியப்பார்த்தா தெரியாதா என்று கவுண்டமணி ஒரு படத்துல சொல்லுவார்....அத வொர்கவுட் பண்ணிப் பார்த்தேன்..நிஜமாப்போச்சு.......

அதேமாதிரி பஸ் நிறுத்தத்தில் நிற்கும்போது நம்மை இடித்துக்கொண்டு பதினைந்துவயது பசங்கள் பெண்கள் வழியில் ஏறுவார்கள்....அவ்ர்களின்குறியும் இதே பிக்சாப்பர்தான்...படக்கென்று கைவிடுவார்கள்...நாம் உசாராக என்னவென்று கேட்டால் தெரியாமல் பட்டுருச்சு என்று சொல்லி சட் என்று அந்த இடத்த விட்டு நகர்ந்து விடுவார்கள்.....சும்மாவா சொன்னாங்க...தூங்கும்போதுகூட கால ஆட்டிக்கிட்டு தூங்கணும்....இல்லாவிட்டால் அதோகதிதான்...

Sunday, August 8, 2010

கண்ணாடி மனசு

இறந்துவிட்டது பாம்பு....

கடிபட்டதை சொல்லிக்கொண்டே இருக்கிறது வடு...


ஆட்டுக்குத்தெரியுமா...

வருபவன்....மீட்பனா,.....வெட்டுபவனா என்று...

Wednesday, July 21, 2010

ம்கனிடம் சுட்ட குறும்படம்.....நடந்த்து... என்ன.....என்ன....

http://www.youtube.com/watch?v=PyyUjntDmCY

மேலே உள்ள தொடுப்பைக் கிளிக் பண்ணிப்பாருங்கள்..
..என்ன ட்விஸ்ட்..??? நல்ல டைரக்சன்.... டைரக்டர் நளன்..

பாருங்க..பாருங்க..

Tuesday, July 20, 2010

எளிமையான எம்.எல்.ஏ...


Wednesday, July 14, 2010

குழந்தைகள் என்ன வளர்ப்பு மிருகங்களா......

ஒசூரில் இன்று ஒரு15வயது.. பெண்குழந்தை ஈவ் டீசிங் காரணமாக விசம் குடித்துத் தற்கொலை...

பத்துவருடங்களுக்கு முன் நான் கேள்விப்பட்டது..

”ஏழாவதிலிருந்து எட்டாவது செல்லும் பன்னிரண்டு வயது சிறுவன்...”தூக்குப்போட்டு தற்கொலை”......?????


காரணம்...”விளையாட புதுசட்டை அணிந்து செல்லாதே.”...தாய் கண்டித்ததால்............
நம்பமுடிகிறதா....அந்தப்பிஞ்சு மனசில் என்ன குறை....
அவன் குறை ..கேட்க யாருமில்லாமல் போனதா......
.ஒருநாளில் அவன் இந்த முடிவுக்கு வந்திருப்பானா.....அந்தக்குழந்தையின் பிஞ்சு மனசுக்குள் வெடித்த பூகம்பத்திற்கு அந்த ஒரு வார்த்தைதான் காரணமா....தாயின் சின்னக் கண்டிப்புக்கு இப்படி ஒரு விபரீத முடிவா...இந்த மண்ணிலிருந்து உயிர் பிரியும்வரை அந்தப்பெற்றோரின் குற்ற உணர்வு விழிமூட அனுமதிக்குமா......
ஏன் இந்த நிலை.. தவறு யாரிடம்....இந்த அவசர உலகில் குடும்பம்கூட இரண்டாம்பட்சமா..

குழந்தைகளிடம் அன்பு காட்டக்கூட நேரமில்லையா..ஒரேவீட்டிற்குள் தனிதனி தீவுகளாக வாழ்கிறோமா...

 பிள்ளைகள்காலைநேரத்தில் ஏழுமணிகெல்லாம் தயாராகி பள்ளிக்கு செல்கிறார்கள்.. சரியாகப் படிக்கவிலலை என்றால் அங்கு ஆசிரியர்களின் கண்டிப்பு....தண்டிப்பு.. அதே காரணத்தால் வீட்டுக்கு வந்தாலும் பெற்றொரின் கண்டிப்பு..மாலை ஐந்துமணிகோ ஆறுமணிக்கோ வந்தால் வீட்டில் யாராவது இருந்து தேவையானதைக்கொடுத்தால் சாப்பிட்டுவிட்டு, அல்லது ஒருவ்ரும் இல்லாவிட்டால் தானே போட்டு சாப்பிட்டுவிட்டு ட்யூசனுக்கு ஓடுகிறார்கள்...அல்லது தொலைக்காட்சியைப் போட்டு உட்கார்ந்துவிடுகிறார்கள்..அப்பா, அம்மா வந்தபிறகு அவர்கள் என்ன ஏது என்று பார்த்து அவர்களின் தேவைகளை கேட்டு அறிந்து பரிவோடு வழிகாட்டினால் ஒரு பிணைப்பு இருக்கும்...இல்லாவிடில் அந்தக்குழந்தைகளின் உணர்வுகள் திசைமாறிப்போகும்...

குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறோம்...குடும்பத்தின் நிகழ்வுகள் அனைத்தும் அவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்...அதை அவர்களின் வயதுக்கு தகுந்தமாதிரி எடுத்துக்கொள்வார்கள்...சில குழந்தைகள் பெற்றொரின் தவறுகளை கேள்விக்குள்ளாக்குவதும் உண்டு..அதை நேர்மையான முறையில் எதிர்கொள்ளவேண்டும்.இரவு ஒரு வேளையாவது ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு நம் குடுமப்த்தின் கஸ்ட நஸ்டங்களை, மகிழ்வுகளை, பிரச்சினைகளை,தேவைகளை பகிர்ந்துகொள்ளவேண்டும்.. குழந்தைகளுக்கு புரியவைக்கவேண்டும்..

சில வீட்டில் பார்த்திருக்கிறேன்...ஒரு குழந்தைக்கு அதிகம் கவனிப்பும், மற்றதிற்கு ஏச்சும் பேச்சும்....இந்தப்பாரபட்சம்தான் அவர்களை தவறான் முடிவுக்கு கொண்டு செல்கிறது... ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும் எல்லாக்குழந்தையும் ஒரே மாதிரி இருக்கிறதா.....அறிவில், தோற்றத்தில், .நிறத்தில் வேறுபட்டுத்தானே இருக்கிறது.....சில குழந்தைகள் கறுப்பாய் இருப்பதாய் ,ஊனமாய் இருப்பதாய், மக்காய் இருப்பதாய் துயரம் கொள்ளும்...பெற்றோர்கள்தான் இதைகவனித்து அவ்ர்களின் வேறுதிறமைகளைச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்.. பெற்றோரே விலக்கினால் அது யாரிடம் சென்று முறையிடும்.....யோசியுங்கள் பெற்றோர்களே....குழந்தைகளை ஆடு என்றால் ஆடவும், பாடு என்றால் பாடவும் நாய்க்குட்டி மாதிரி பழக்கி வைக்கவேண்டுமா...அவ்ர்களுக்கென்று ஒரு ஆசை...விருப்பங்கள் இருக்கக்கூடாதா....... ஆண்குழந்தையோ, பெண்குழந்தையோ யாராக இருந்தாலும்..அவர்கள் வயதுக்குத் தகுந்த பிரச்சினைகள் இருக்கும்;;;;.அதுவும் பெண் குழந்தைகள்  என்றால் சில அந்தரங்கமான விசயங்களை தாயிடமோ அல்லது தோழியிடமோதான் சொல்லமுடியும்...தீர்வையும் பாதுகாப்பையும் தாய்தான் செய்ய முடியும்...

கொஞசம் காதுகொடுங்கள் பெற்றோர்களே....

எதற்குத்தான் இந்த வாழ்க்கை....எத்தனை கோடி கொடுத்தாலும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்தத்துயர் போகுமா..எங்கே செல்கிறது...அவசரமாய் இந்த உலகம்..

புரியாத புதிர்கள் , துயர்கள் வரிசையில் இதுவும் ஒன்று... 

Thursday, July 8, 2010

கண்ணாடி மனசு

கேட்காத கேள்விக்குள்ளும்
சொல்லாத பதிலுக்குள்ளும்
உறைந்திருக்கும்
ஊமையின் கனவுகள்..

Tuesday, June 8, 2010

ஆபத்து.....ஆபத்து...ஓடியாங்க...ஓடியாங்க....கொடிவேரிக்கு ஆபத்து..

ஆபத்து......ஆபத்து......அடுத்த நொய்யலா....கொடிவேரி.????


                                 அழகு கொஞசும் கொடிவேரி அணை..

                                           நொய்யல் சாயக்கழிவு

நேற்றைய தினமலர் செய்தியைப் பார்த்ததும் பகீரென்றது....கொடிவேரி அணையில் சாயக்கழிவு நீர் தேங்கி நின்றதைக்கண்டு சுற்றுலாப்பயணிகள் உடலில் அரிப்பு ஏற்படும் என்று அஞ்சி குளிக்காமல் சென்றனர் என்கிறது செய்தி...இந்த சாயநீர் கலப்பு  பிரச்சினை இன்று நேற்றல்ல.. வெகு காலமாக இருக்கிறது...இப்போது அணையில் நீர் வரத்து இல்லாத்தால் வெளியில் தெரிகிறது.

இதற்காக பல எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன...கொஞச காலம் நிறுத்தப்படும்...பிறகு மீண்டும் தொடரும்...இது ஒரு தொடரும் நிகழ்வு....இப்படியே போனால் நொய்யலின் கதிதான் ...கொடிவேரிக்கும்....??

.அரசு ஏன் இந்த மாதிரி தொழிலகங்களை நீர்வழிப்பதைகளின் அருகில் அனுமதிக்கிறது.???..தொழில்கள் வளரவேண்டும்தான்....அதேசமயம் நம் வாழ்வாதாரங்களே பாதிக்கப்படுவதை எப்படி அனுமதிப்பது...கோபி வட்டாரமே விவசாயத்துக்குப் பெயர் போனது...இப்போது நிலமை தலைகீழ்.....அதிகாலை நான்கு மணிக்கே திருப்பூர் கம்பெனி பஸ்கள் எல்லா ஊர்களிலும் ஆட்களை 

அழைத்துச்செல்ல அணிவகுத்து நிற்கின்றன...பெரும்பாலான குடும்பங்களின் இளம்தலைமுறையினர் விவசாயத்தைக் கைவிட்டு திருப்பூருக்கு செல்கின்றனர்..வீட்டுப்பெரியவர்கள்தான் ஏதோ 

கிடைக்கும் ஆட்களை வைத்து விவசாயம் செய்கின்றனர்...கிடைக்கும் ஓரிரண்டு வேலை ஆட்களும் "100ரூபாய்” திட்ட வேலைக்குச் சென்று நோகாமல் இருப்பதையே விரும்புகிறார்கள்.. 

அந்த வேலையில்தானே இரண்டு பேர் செய்யும் வேலையை இருபது பேர் செய்யலாம்.???...அப்புறம் எப்படி விவசாயத்துக்கு ஆட்கள் கிடைக்கும்....வேலை தருகிறேன் என்று இப்படி திருப்பிவிடுவதால்.இந்தத் தலைமுறையோடு விவசாயமே அற்றுப்போய்விடும்போல் இருக்கிறது..அப்புறம் பருவமழை பாதிப்பு....

இந்த லட்சணத்தில் தட்டுத்தடுமாறிகிடைக்கும் நீரில்  விவசாயம் செய்தால் இந்தக்கழிவுநீர் பிரச்சினை...நம் ஈரோடு மாவட்டத்தின் ஒரே நீர்வீழ்ச்சி... எத்தனைபேரை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது.அங்கு 

சென்றுவருபவர்களுக்குத் தெரியும்...அதன் அழகும்...பசுமையும்...அந்த அழகுக்குப் பாதிப்பா??.....எத்தனைஊர்களுக்கு குடிநீராகச் செல்கிறது...குடிப்பவர்கள் உடல்நிலை.???..எல்லா ஆறும் இன்று 

விசமாகிகொண்டிருக்கிறது...இப்போதாவது விழித்துக்கொள்ளாவிட்டால் நல்ல குடிநீர்இல்லாமல் சாகவேண்டியதுதான்..

நொய்யலை இப்படி கண்டுகொள்ளாமல் விட்டுத்தான்.அந்த ஆறே பாழாகிவிட்டது....பலகோடி செலவில் கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணை கழிவுநீர் அணையாகப் பேர் வாங்கி இருக்கிறது...அரசு ...

விழித்துக்கொண்டு கொடிவேரி அணையைக் காப்பாற்ற ஆவண செய்யவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்..இல்லாவிட்ட்டால்.... ”புலி வருது...புலி வருது”....புலி வந்தே விடும்..இதில் 

மக்களுக்கும், அரசுக்கும் சரிப்பாதி பங்கு உள்ளது...இதில் கடைசியில் பாதிக்கப்படுவது மக்களாகத்தான் இருக்கும்..

ஒருபுறம் அணையை அலங்காரம் பண்ணிவிட்டு மறுபுறம் சாயக்கழிவுகளை விட்டால் என்ன ஆகும்....

.அணையை அலங்கரித்தால் போதாது....அது சுற்றுலாவை வேண்டுமானால் வளர்க்கும்..பிறகு நொய்யல் மாதிரி ஆகிவிட்டால் யார்வருவார்கள்.....முதலுக்கே மோசம் வந்துவிடும்.


.
கோடி கோடியாக மானியங்களும் தள்ளுபடிகளுமா நம் தாகத்தைத் தீர்க்கப்போகிறது,,???? ....கண் கெட்டபிறகு சூர்ய நமஸ்காரமா????....முழிச்சுக்குகங்க....முழிச்சுக்குங்க.... 

நன்றி..கூகிள் படத்திற்கு..

Wednesday, June 2, 2010

இதுதான் பதிவுலகமா????

நேற்று ஒரு ......X......இன்று ஒரு முல்லை......நாளை ஒரு.....Y.....ஆ...ஆ.........

வேதனைகளுடன்...........Thursday, April 29, 2010

நீயும் நானும்...


மவுனத்தின் அணிகலனாய் நான்

அதிர வைக்கும் பட்டாசாக நீ

கவிதையும் கன்வுமாய்வானில் சிறகடிக்கும் நான்

அழுத்தமாய் தரையில் ஊன்றி நிற்கும் நீ

எதுவும் வேண்டாத்துறவியாய் நான்

ஆயிரம் ஆசைகளுடன் நீ

இலக்கற்ற சோம்பலுடன் நான்

ஓய்வே இல்லாத நீ

தொட்டாற்சிணுங்கியாய் நான்

எதற்கும் கலங்காத நீ

ஆனாலும் என்னுயிர் என்கிறாய் நீ

உன்னுயிர் என்கிறேன் நான்

எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது இப்படித்தானோ...

ஊசியும் நூலுமாய் ஓடுகிறது வாழ்க்கை அழகாக..


டிஸ்கி: நாங்களும்ம்ம்....கெளம்பிட்ட்டோமில்ல.....


Thursday, April 22, 2010

சிரிக்க மட்டும்...

சிரிங்க...சிரிங்க.....

(பொருத்துக.)

  1...“ஒல்லுக்கு ஒரு பக்கம் இடி.....மத்தளத்திற்கு இருபக்கம் இடி”...(மன்மோகன்சிங்)

  2. “முன்னாடி போனா கடிக்குது...பின்னாடி போனா உதைக்குது”....(கலைஞர்)

  3. “ஆப்பசைத்த குரங்கு”.....(நித்தியானந்தா)

  4. “ஆடிய ஆட்டம் என்ன?....பேசிய வார்த்தை என்ன?”.....(சசிதரூர், லலித்மோடி)

 
  5. “எதைதின்றால் பித்தம் தெளியும்”....(வை.கோ)...

  6.”தூங்குன மணியகாரரை எழுப்பினா
  
      பழைய கந்தாயம் எல்லாம் கேட்பார்”......(பா.ம.க.ராம்தஸ்).

  7”திண்ணை எப்போ காலியாகும்”............(ஐ.பி.எல்...பிரச்சினகள்).

  8.”என் வழி....தனி வழி.”....(விஜயகாந்த்)..

9”நடக்குமென்பார்....நடக்காது...நடக்காதென்பார்..

     ந்டந்துவிடும்”....(ரஜினிகாந்த்)


  சரியான விடை எழுதுவோருக்கு எங்கூர் டூரிங் டாக்கீசில் “வேட்டைக்காரன் படத்துக்கு கடைசிக்காட்சி...கடைசி டிக்கெட் பரிசாக வழங்கப்படும்”

  டிஸ்கி: வெயில் ரொம்ப அதிகம்...அதான் இப்படி..

Sunday, February 21, 2010

மழைக்கெடா.

எங்கள் விட்டுக்கு அருகில் உள்ள நண்பர் வீட்டில் இரவில் கெடாவிருந்து.அழைப்பு வந்த்து எங்களுக்கும், கணவரின் சக அலுவல்ருக்கும். அவர் என் கணவரின் தொழில் போட்டியாளர்.இருந்தாலும் நெருங்கிய நண்பர்கள்.என் கணவருக்கு ரெகுலர் கஸ்டமர்கள் அதிகம். ரொமப நாட்களாக தொழில் செய்பவர். என்ன செய்தாலும் எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களிடம்தான் வருவார்கள். அந்தக்காண்டு...என் கணவரின் நண்பருக்கு.....


என்ன செய்தார் தெரியுமா....
அவர் பத்திரிக்கைகளில் எல்லாம் எழுதுவார். அவர் ஒரு கதையில் என் கணவர் பேரை வில்லனுக்கு வைத்து ஊர் பேரோடு போட்டு வெளியிட்டார். குங்குமத்தில் வெளிவந்தது. என் கணவர் அதைப்பார்த்துவிட்டு சிரித்துவிட்டார். ஆனால் விசயம் அதொடு போகவில்லை. அந்தப்பேரில் அந்த ஊர் முக்கியஸ்தர் ஒருவரும் இருந்தார். அவர் உடனே தன் படைபரிவாரங்களோடு கிளம்பிவந்து அந்த நண்பரை ஒரு பிடிபிடித்துவிட்டார். முழிமுழியென்று முழித்துப்போனார் பார்ட்டி....அப்புறம் என்ன.... என் கணவரிடம் சரண்டர். “ அய்யா.... அவர் எழுதியது என்னைப்பற்றித்தான். உங்களை இல்லை” என்று மணிககணக்கில் பஞ்சாயத்துப்பேசி அனுப்பி வைத்தார். இப்படி அடிக்கடி நடக்கும். ஏதாவது ஏடாகூடமாக செய்து வம்பில் மாட்டிக்கொள்வார்.


கதைக்கு வாங்க. நண்பர் பத்து நாட்கள் வெளியூர் போய்விட்டார். அவர் அலுவலகத்துக்கும் விருந்து நடைபெறும் வீட்டிற்கும் நடுவில் ஒரு வேலியும் அதில் ஒரு படல் வைத்து வழி உள்ளது.நண்பர் அந்த வழியாகத்தான் அந்த வீட்டுக்குச் செல்வார். வீட்டுக்காரர்கள் அதில் கழிவறை கட்டுவதற்காக 8அடிஆழம்6அடி அகலத்தில் கிணறு மாதிரி வெட்டி வைத்திருந்தார்கள். அது அவருக்குத்தெரியாது.

அப்போதுதான் முதல் பந்தி ஆரம்பித்தது. இலையில் கை வைத்தோம். சடசடவென்று மழை. கரண்ட் போய்விட்டது. மெழுகுவர்த்தி தேடி எடுப்பதற்குள் “ டொம்” “ ஆ அய்யொ அம்மா” என்று ஒரு அலறல்.

அவ்வள்வுதான், “யாரோ விழுந்துவிட்டார்கள்” என்று ஒரே கூக்குரல். எல்லோரும் எழுந்துவிட்டோம்......”சார்தான் விழுதுவிட்டார்” என்று அடுத்த சத்தம். என்க்கு கதிகலங்கிவிட்டது. அழுதுகொண்டே இருட்டுக்குள் என் இரண்டு வய்துக்குழந்தையோடு ஓடினேன்.

ஆனால் விழுந்தது கதைப்பார்ட்டி....... அழுகையை நான் நிறுத்திக்கொள்ள, அவர் மனைவி தொடர்ந்தார்.....அவர் குழி இருப்பது தெரியாமல் வேலியைதிறந்து காலை வைக்கவும், கரண்ட் போகவும்....... ஒரே லக..லக..லகதான்.

மழையோ கொட்டுகிறது. ஏணி ஒன்றை உள்ளேவிட்டார்கள். ஏறமுடியவில்லை. கால் முறிந்துவிட்டது. பாவம் துடித்துப்போய்விட்டார் மனிதர்.........நான்குபேர்கள் உள்ளே ஒரு கட்டிலோடு இறங்கி மேலே தூக்கிப்போட்டார்கள்.

அப்புறம் என்ன? ஆஸ்பத்திரிதான். மாவுக்கட்டுதான். அவர் மனைவியோடு நானும் ஈரோடு போய் நடுராத்திரி இரண்டு மணிக்கு பசியோடு திரும்பி வந்தால் இங்கே எல்லாம் சுத்தம். கழுவி கமுத்தி வைத்துவிட்டார்கள்.

விழுந்தது அவர்கள் வீட்டில். விழுந்தது எங்கள் நண்பர் ஆனதால் நாங்கள் கூட்டிப்போனோம். ந்ம் வீட்டில் விழுந்தவர்களை ந்மக்குப்பதிலாக் கூட்டிப்போனார்களே. எதாவது எடுத்து வைப்போம் என்று நினைத்தார்களா?...அவர்கள் ஜாம்..ஜாமென்று விருந்து போட்டு அவர்கள் வேலையை முடித்துக்கொண்டார்கள். நாங்கள்தான் சிவபட்டினி. குழந்தைக்கு பழத்தைக்கொடுத்து பசியாற்றினோம்.

“ ஆண்டவன் அன்று அந்த வீட்டு அரிசியில் எங்கள் பேரை எழுதவில்லை போல”

Tuesday, February 9, 2010

நெஞ்சத்தைக் கிள்ளியது..கொஞசம்.........

நெஞ்சத்தக்கிள்ளிவிட்டு விட்டார்...அம்பிகா..வேறென்ன..கொசுவத்திதான்..

நாமெல்லாம் அந்தப்பீரியட் ஆளுகளாச்சே..

பயமறியா வயது....தமிழ்வாத்தியார் வீட்டு சுவற்றில்தான் அணுகுண்டுப்பட்டாசை தம்பி வீசுவான். கோபத்தோடு வெளிவருவார். மறுபடியும் ஒரு குண்டு.... வாத்தியார் மறுபடி வருவாரா என்ன..

அது ஏங்க இந்த தமிழ்வாத்தியார்கள் மட்டும் சாதுவா இருக்காங்க..

பக்கத்துல ஒரு கட்டிடம் வேலை நடந்த்தது. காவலுக்கு இரு பசங்க..கொட்டிக்கிடக்கும் மணலில் குழந்தைகளை விளையாடவிடமாட்டார்கள். விடுவாங்களா நம்ம தெருப்பசங்க.

ஒருநாள் இரவில் அவர்கள் உறங்கியதும் தலைமாட்டில்ஒரு மண்டையோட்டுக்குள் மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றிவைத்துவிட்டு பதுங்க்கிகொண்டார்கள்.

கல்லை எடுத்துவீசி அவர்களை எழுப்பிவிட்டார்கள். விழித்துப்பார்த்துவிட்டு ஓடியவர்கள்தான்.....அடுத்தநாள் வேலைக்கு வரவில்லை....

எங்க டீனேஜ் நாயக, நாயகிகள் யாரு தெரியுமா..நம்ம ரஜினி, கமல், ஸ்ரீதேவிதான்...

எஙகூருக்கெல்லாம் படம் வெளிவந்து மூன்றுவருடம் கழித்துத்தான் வரும்.

அப்ப்டிவெளிவந்து பட்டையைக்கிளப்பிய “16வயதினிலே” படத்த பள்ளித்தேர்வு காரணமாக மிஸ் பண்ணி வருத்தப்பட்டது இன்னும் ஒரு கொசுவத்தி..

அப்போதுதான் இந்த ஒற்றைகல் மூக்குத்தி ஃபேசன் நானும் என் தோழிகளும் வரிசையாகக் குத்திகொண்டோம்.

அப்பல்லாம்  சினிமாவை விட்டால் வேறு பொழுதுபோக்கு இல்லை,

உறவினர் ஒருவர், அவர் மனைவி, அவரின் சகோதரி என் வகுப்புத்தோழி...,தம்பிகள் என்று ஒரு கேங்காகப்போவோம்.

உறவின்ரின் மனைவியும் சகோதரியும் இருக்கிறார்களே. ரொம்ப படத்தில் முழுகிவிடுவார்கள்

கமல்,ஸ்ரீதேவி, நடித்த வாழ்வேமாயம் படத்துக்குப்போனோம்.

ஒருபுறம் சகோதரி.நடுவில்நான்.மறுபுறம் சகோதரி. கடைசி சீனில் வாழ்வே மாயம் என்று பாடிக்கொண்டு கமல் செத்துப்போவாரே.அந்தசீன்...

ஆரம்பிச்சுட்டாங்கப்பா இருவரும் அழுகையை....என் கண்ணைக்குத்தினால்கூட அழமாட்டேன் அப்படிபட்ட என்னிடம்....

ஒருவர்” அய்யோ....நெஞ்செ வெடிக்குதே.....தாங்க முடியலையே”

இன்னொருவர் என் கையை இறுக்கிப்பிடித்துக்கொண்டு கமல் செத்துருவானா” என்று தேம்ப நடுவில் நான் சிக்கிக்கொண்டு அடித்த சீக்கி இருக்கிறதே...யம்மா....அந்த அண்ணாவுக்கு கோபம்.. வந்து தியேட்டரைவிட்டு வெளியில் போய் நின்றுகொண்டார்...

இதுபோதாது என்று  ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஈரோடு போய் ஒரே நாளில் இரண்டுமூன்று படங்கள் பார்ப்போம்.

இந்தப்பார்ட்டிகளோடு சத்யராஜ் பிரபலமான் “நூறாவதுநாள்” படத்துக்குப்போனால் எப்படி இருக்கும்...

சுவற்றுக்குள் இருந்து ஒரு எலும்புக்கூடு நளினியைக்கட்டிப்பிடிக்குமே....அப்ப அந்தக்கா கத்துன கத்தலில் தியேட்டரே எங்களை திரும்பிபார்த்தது, அப்புறம் கணவர் வெளிநடப்பு....இந்தப்படத்துக்கெல்லாம் ஏன் கூட்டிவர்ரீங்கன்னு அர்ச்சனை வேற நடக்கும்.

அப்புறந்தாங்க வேடிக்கை. இந்தப்பயந்தாக்கொல்லிகளை சும்மா விடலாமா..அப்புறம் திங்கற சோறு எப்படி எங்களுக்கெல்லாம்ஜீரணம் ஆகும்....போடு பிளானை....

தினமும் மாலைநேரம் அந்தக்காவும், தோழியும் வருவார்கள்.

. எங்களது ஓட்டுவீடு... ஹாலில் உள்ள மர விட்டத்தில் என்சின்னத்தம்பியை கறுப்பு ஸ்வெட்டர், முகத்தை மறைத்து வெள்ளைத்துணி.சகிதம்.முனி படத்தில் குத்தவைத்து உட்கார்ந்து ராஜ்கிரண் ஒரு போஸ் கொடூப்பாரே. அது மாதிரி கைகளை அசைத்து வா...வா....என்று கூப்பிடுவதுபோல்உட்கார வைக்கப்பட்டான். கதவுக்குப்பின்னால் என் பெரிய தம்பி மெயின் சுவிட்ச் அருகில்..நான் ஹாலில் மறைந்துகொள்வது.

பெண்கள் இருவரும் ஹாலுக்குள் நுழைந்ததும்  மேலேஉட்கார்ந்திருக்கும் தம்பிதான் கண்ணில்படுவான்.உடனே “ஜங்” கென்று அவன் குதிக்க நான் வீல் என்று சவுண்டு கொடுக்க பெரியவன் மின்சாரத்தைப் பிடுங்க....(கதை வசனம், டைரக்சன் யாரு நானாச்சே)..

எல்லாம் பிளான்படிதான் நடந்தது....வந்தார்கள்....பார்த்தார்கள்.....அலறினார்கள்.....ரோட்டுக்கு ஓடினார்கள்....

அவர்கள் “பேய்....பேய்...”.... என்று கத்திய கத்தலில் ரோட்டில் கூடிய கூட்டம்தான் எதிர்பாராத திருப்பம். அப்புறம் அசடு வழிந்துகொண்டேவெளியே நாங்கள் வந்து விளக்கம் கொடுத்தது வேறு கதை..அடடா...எத்தனை சாகசங்கள்...

இப்பல்லாம் இதுமாதிரி பசங்கள் விளையாடுவார்களா........படிப்பத்ற்கே நேரம் போதவில்லையே..ஊம்....அது ஒரு காலம்....கொசுவத்தியை தூண்டிவிட்ட அம்பிகாவுக்கு நன்றி...

அடுத்து கதை சொல்ல அழைப்பது க..பாலாஜி, வால்பையன்,ஆரூரான்,ஹேமா, அமைதிச்சாரல், இயற்கை,,,,வாங்களேன் நேரமிருந்தால்...


Monday, February 1, 2010

சரக்கு நாங்களும் அடிப்பமில்ல....

x
x
x


  • எனக்கொரு பெக்...தம்பிக்கொரு பெக்......பிராந்தி......

ஊற்றிகொடுத்தார் அப்பா.......சர்க்கரை எல்லாம் போட்டு நல்லாத்தான் இருந்துச்சு.....ஒரு மிடறு குடித்துவிட்டேன்....அந்த வாசனை ஏனோ பிடிக்கவில்லை. .ஏதோ சந்தேகத்தில் ( பெங்களூரில் பாரில் புகுந்து பெண்களை எல்லாம் அடித்தார்களே...அதுமாதிரி அடிச்சுப்புடுவாங்க..அப்புறம் குடிகாரின்னு பட்டம் குடுத்திருவாங்களோ.என்று என் மனக்கண்ணில் தெரிந்திருக்குமோ.......ஆமாங்க  இவங்க கவர்ன்மெண்டே டாஸ்மாக் கடை எல்லாம் நடத்துதே.....அங்க குடிக்கிற ஆம்பளகலப்போய் அடிக்கலாமே...)  குடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டேன்.....நம்புங்க சாமி........இப்பெல்லாம் இல்லங்க,,,,சந்தேகமாப் பார்க்காதீங்க....

தம்பி முழுசாக்குடிச்சுட்டான்....அப்புறந்தாங்க வேடிக்கை.....

புல் மப்பு......அங்க ஓடறான். இங்க ஓடறான்....அலமாரியில் ஏறி பாத்திரங்களை எல்லாம் “கேட்ச்” அப்படின்னு வீசறான்.

அடுக்கிவைத்த பேப்பர்களை வாரி வாரி வீசறான்......

பெல்ட் போட்ட டவுசர இழுத்து இழுத்து விட்டுக்கிட்டு.

இஞ்சி தின்ன குரங்கு மாதிரி........ரஜினி படத்துல குட்டியானை ஒண்ணு தண்ணி அடிச்சுட்டூ ரகள பண்ணுமே...அதுமாதிரி.  அட சாமி.......அளும்புன்னா....அளும்புதான்.. அவன் பண்ணியது.......

சிரிச்சு சிரிச்சு எல்லோருக்கும் வயிறே வ்லிச்சுருச்சு, அம்மாவத்தவிர ......

பின்ன வாந்திஎடுத்துட்டு தூங்கினவனைத்திட்டிக்கிட்டே அவங்கதான சுத்தம் பண்ணினாங்க....

வேற ஒண்ணும் இல்லங்க.....எனக்கும் தம்பிக்கும் அப்ப தீராத சளி...பிராந்தி குடுத்தா சரியாப்போயிருமுன்னு.

ஒரு புண்ணியவான் கொடுத்த ஐடியாலதாங்க இந்தக்கூத்து...

எனக்கொரு சந்தேகம்....ஆம்பளப்பசங்க எந்த வயசுல குடிக்க ஆரம்பிக்கிறாங்க....பெரும்பாலும் கல்லூரி போற பருவம் ஆகத்தான் இருக்கும்..

ஆமா இந்த சரக்கில அப்படி என்னதான் இருக்கு.

ஆனா என்ன ஒண்ணு......குடிக்கிற எல்லாருமே அயோக்கியன் இல்ல...குடிக்காதவங்க எல்லாம் யோக்கியனும் இல்ல்...

அதுலயும் இந்த சரக்கு அடிக்கிறவனாவது அடிச்சுட்டு மட்டை ஆய்டறான்.

இந்த சரக்கு அடிக்காத புண்ணியாத்மாக்கள் இருக்காங்களெ....அவங்க விடற சவுண்டு இருக்கே....எஙகூட்டுக்காரர் மாதிரி.....

ஏதாவது எங்கூட வாக்குவாதம் பண்ணி ஜெயிக்க முடியலைன்னு வச்சுக்கங்க........நம்ம கலைஞர் மாதிரி வேறு ஒரு குற்றத்த நம்மமேல சுமத்துவாங்க.......அதோட விடுவாங்களா.....”உனக்கெல்லாம் குடி,சிகரெட்டுன்னு திரியறாங்க பாரு....அவன மாதிரி வாய்ச்சுருக்கணும்....னு...வசனம் பேசுவாங்க....

என்னமோ நமக்காக இதெயெல்லாம் தியாகம் பண்றமாதிரி.....

நாங்களுந்தான்  சரக்க்டிக்கிறதில்ல. சிகரெட் குடிக்கிரதில்ல......நாங்க என்ன சொல்லிக்கிட்டா திரியறோம்....உங்களுக்கெல்லாம் சரக்கடிக்கிற பொண்டாட்டி வாய்ச்சுருக்கணும்...அப்படின்னு....

கல்யாணத்துக்கு முன்னாடி தண்ணி போட்டா பொண்ணு குடுக்கமாட்டாங்கன்னு நல்லகுடி நாச்சி வேசம் போடறது...அப்புறம் உங்களால்தான் பிரச்சின...கவலய மறக்கறதுக்கு தண்ணி போடறேன்னு ஆரம்பிக்கவேண்டியது....

ஏங்க எங்களுக்கெல்லாம் கவலை வராதா.....நாங்கல்லாம் ஆரம்பிச்சோமுன்னா உங்களுக்கெல்லாம் ஒண்ணும் மிச்சமிருக்காது...ஞாபகத்துல வச்சுக்குங்க....
.

எங்க சொந்தக்காரர் ஒருத்தரு.....ரொம்ப நல்லவரு....மனைவி மேல் ரொம்பப்பிரியம்...(ஸ்லேவ்...பார் .....ராஜீ).......அப்ப்டின்னு சைக்கிள்ள பச்சை குத்திட்டு த்திரிஞ்சவரு. ஸ்லேவுன்னா அடிமைன்னு அதுக்கப்புறம்தான் தெரிஞ்சுது..அதிகாலைல குளிச்சு சந்தனமும், சவ்வாதுமாய் நீட்டா இருப்பாரு. நிரந்தர வேலை இல்ல. கிடைத்த வேலைகளைச் செய்வார்.மனைவி சொல்லுக்கு ம்றுவார்த்தை கிடையாது அவ்வளவு பிரியம்..5,7வயதில் 2ஆண்குழந்தைகள்.நேரம் தவறாமல் எல்லா வேலையும் நடக்கும்..

ஆனா இரண்டு மாத்த்திற்கொருமுறை ஒரு ரெண்டுநாளாவது மலையேறிடுவாரு......சரக்குதான் வேறென்ன.....சரக்கு அடிசுட்டா எல்லாம் தலைகீழா மாறிடும்..ஆளத்தேடணும்....எங்கியாவது ரோட்டோரத்திலியோ, சாக்கடை ஓரத்திலியோ விழுந்துகிடப்பார்.அவர் மனைவி கண்ணீரும் கம்பலையுமா எங்கூட்டுக்கு ஓடிவருவாங்க....எந்தம்பியும் அந்தக்காவும் ஆட்டோ எடுத்துட்டுப்போய் வீட்டுக்கு அள்ளிப்போட்டுக்கிட்டு வருவாங்க..அந்த அண்ணாவோட அண்ணந்தம்பிகள் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள்...மானம் போகுது மரியாதை போகுதுன்னு....மனைவிதான் பாவம்.....வேறென்ன.....

அவரின் 5வயதுமகன் ”சாயாயாயம்  குய்ப்பியா....குய்ப்பியா” என்று மழலையில் அவன் அப்பாவை முடியைப்பிடித்துஅடிப்பதையும், அவர் மயக்கத்தில் கிடப்பதையும் பலமுறை பார்த்திருக்கிறேன்.

இவரும் அதிகமா எல்லாம் அடிக்கமாட்டாராம். .ஒரு ரவுண்டிலியே பிளாட் ஆகிவிடுவார்போல. அப்புறம் தண்ணி அடிச்சுட்டு அடுத்தவ்ன்கூட சண்டைபோடறதோ, பொண்டாட்டிய வையறதோ கிடைதாம்.ரோட்டரத்துல மட்டும்தான் படுத்துக்குவாராம். ரொம்ப நல்லவராம்....இப்ப்டிச்சொல்லி அந்தக்கா மனசத் தேத்திக்குவாங்க..

அப்புறம் ஒரு பொறுப்பான அரசு உத்தியோகம் கிடைச்சுது. கொஞசநாள் நல்லா இருந்தார்.அப்புறம் பழைய கதைதான்....அப்புறம் இதெல்லாம் வேலைக்காகாதுன்னு  அந்தக்கா ஒருவழி கண்டுபிடிச்சாங்க...பச்ச வேட்டி கட்டு...பழனிக்கு மாலை போடு ஆறு மாசத்துக்குன்னு......

எல்லாம் மாலை கழுத்துல இருக்குற வரைதான்...அப்புறம் பழய கதைதான்...அப்புறம் அந்தக்கா என்ன செய்வாங்க... ஒரு வாரத்துல வேற்கோயிலுக்கு மாலை போடு....ன்னு ஒரு பதினைந்துவருடம் போராடி பசங்களுக்கு கல்யாணவயசு வயசு வந்திருச்சு...இது தேவையா அப்படின்னு சொல்லிக்கில்லிஇப்ப அந்த பழக்கத்தையே விட்டுட்டாரு. இரண்டு மகன்களும் இன்று நல்ல வேலையில் இருக்கிறார்கள்.

இன்று அந்தக்குடும்பம் நல்ல நிலையில் இருக்கக்காரணம் அந்தப்பெண்ணின் பொறுமையும்,தியாகங்களும்தான்..அந்தப்பழக்கத்தை அவர் விட்டாருன்னா அதுக்குக்காரணம் அவரின் குடும்பப்பாசமும்தான்...

இன்னொரு உறவினர் குடும்பம்...கிராமத்து ஆள்.. மகா முரடர்....5,7வயதில் இரண்டு ஆண்குழந்தைகள்.3வயதில் ஒரு பெண்குழந்தை....மொடாக்குடி.....பின் மனைவியைப்போட்டு அடின்னு ஒரே அதகளம்தான்.பார்த்தார், அந்த அப்பாவிப்பெண் தாங்கமுடியாமல் ஒரு முடிவு எடுத்தார்.இரண்டு ஆண்குழந்தைகளையும் அவர் அம்மாவீட்டில் கொண்டுவிட்டுவிட்டு பெண்குழந்தையை வயிற்றில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துவிட்டார்.இன்றும் என் மனதில் நீங்காத வடு அது....இதில் நான் யோசித்த விசயம்.....

ஆண்குழந்தைகள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள். ஆனால் பெண்குழந்தைக்கு எந்தக்காலத்திலும் தாயின் உதவி தேவை...அதோடு தன் புருசன் போலவே தன் பெண்ணுக்கும் கிடைத்துவிட்டால் என்ற பயம் ஏற்பட்டிருக்குமோ..அதனால்தான் அந்தப்பெண்குழந்தைக்கு அந்தக்கதியோ.....

அவருக்கென்ன கொஞச நாள் கழித்து வசதி இல்லாத் ஒருபெண்ணை வேறு திருமணம் செய்துகொண்டார் அதுவும் வேறு குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது. தன் குழந்தைகளை பார்த்துக்கொள்வது மட்டுமே என்று...பாவம் அந்தப்பெண் அது அவரின் சூழ்நிலை...

.இந்த இரண்டு குடும்பங்களிலுமே பாதிக்கப்பட்டது பெண்கள்தானே....அந்தக்குடும்பத்த உறவினர்கள் உட்பட ஒருவரும்கண்டுகொள்ளமாட்டார்கள். அந்தக்குடுபத்துத்துக்குழந்தைகளுக்கு குடிகாரனின் பிள்ளைகள் என்ற பட்டம் கிடைக்கும்..அவர்களின் திருமண வயதில் இது பெரும்பிரச்சினையாக இருக்கும்....பிள்ளைகள் எவ்வளவு நல்ல நிலையில் இருந்தாலும் தகப்பன் குடிகாரனாக இருந்தால் அந்த வீட்டில் பெண்னோ, பிள்ளையோ எடுக்கத் தயங்குவார்கள்.....பொண்டாட்டிதான் என்ன்மோ தப்பு பண்ணிட்ட மாதிரி எல்லா இடங்களிலும் தலயக் குத்திட்டு நிப்பாங்க.. அவுருபாட்டுக்கு .சம்பந்தமே இல்லாதமாதிரி போஸ் குடுத்துட்டு இருப்பாங்க.சம்பந்தப்பட்ட அந்தப்பெண்கள் ஸ்டிராங்கா இருந்தாங்கன்னா முதல் குடும்பம் மாதிரி போராடி குழந்தைகுட்டிகளை நல்ல நிலைக்குக் கொண்டு வருவாங்க...இல்லாவிட்டால் இரண்டாவது கதைதான்....எத்தனை பார்க்கிறோம்..அப்புறம் இன்னொண்ணு...இந்த ஆட்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் நல்லதையே சொன்னாலும் சபையேறாது..யாரும் காது கொடுத்துக் கேட்கமாட்டாங்க...மதிக்கவும் மாட்டாங்க....

இதெல்லாம் ஏங்க அந்த ஆட்களுக்குத் தெரிய மாட்டேங்குது.உடல் நலத்தையும் கெடுத்துக்கிட்டு மத்தவங்களையும் தொந்தரவு பண்ணிக்கிட்டு.... யாரோ எப்படியோ போகட்டும் ...நமக்கு பாட்டில் இருந்தா சரி என்ற சுயநல்ம்தானே....அப்படி இருப்பவர்கள் கல்யாணம் செய்துகொள்ளாமல்.விருப்பம் போல  இருக்கலாமே... ஒரு பெண்ணாவது நிம்மதியாக இருப்பாளே.....எல்லா அவமானங்களிலில் இருந்தும் அந்தப்பெண்ணாவது தப்பிப்பாளே.. சிந்தியுங்க சாமி..........

டிஸ்கி: இதுமாதிரி நிறையப்பேருக்கு நேரில் புத்தி சொல்ல ஆசைதான்.....ஆனா அப்புறம் நம்மளப்பார்த்தாலே வில்லியப் பார்த்தமாதிரி தெறிச்சு ஓடிடுவாங்களே....அதனால்தான் இ ந்த மாதிரி.....வேறென்ன செய்ய....

Thursday, January 21, 2010

பெரியாரும், பங்காரு அடிகளாரும், பெண்ணியமும்......

பங்காரு அடிகளாரின் சக்தி பீடமும் அவருடைய அருள்வாக்கைப்பற்றியும் அங்குவரும் பெண் பெண்பகதர்களின் பக்தியைப் பற்றியும் நான் இங்கு சொல்லவில்லை.அவருக்கு துதிபாடவும் நான் வரவில்லை.....அவரின்மிகப்பெரும் வெற்றிக்குக் காரணம் பெண்களின் மீது விதிக்கப்பட்டிருந்த சில தடைகளை உடைத்ததும்,...பெண்கள் சக்தியும்தான் காரணம் என்பேன்......

 சுமார் முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் மிகவும் எளிமையாக இருந்த இயக்கம் , ஆதிபராசக்தி கோயில் இன்று கல்லூரிகளாக விரிவானது முதல், காங்கிரஸ் மேடையில். ராஜீவ் காந்தியோடு அமரவைக்கப்பட்டதுவரை அவரின் மிகபெரும் வெற்றிகளுக்கெல்லாம் காரணம் பெண்கள்தான் என்பதை அவரே மறுக்கமாட்டார்.

 இன்றுகாலை அருகில் உள்ள  காய்கறிக்கடைக்குச்சென்றேன்.ரோட்டோரப்பெட்டிக்கடை அது. வண்ணம் அடிக்கப்பட்டு முன்புறம் சாணம் கொண்டு மெழுகி பளிச்சென்று இருந்த்து.கடைக்காரபெண் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்... அந்தப்பெண் மருவத்தூர் செல்ல சக்தி மாலை அணிந்திருந்தார். பார்க்கவே சந்தோசமாக இருந்த்து. ஒரு காலத்தில் அந்தப்பெண்ணிடம் பலர் காய்கறி வாங்கவே தயங்கிய காலம் ஒன்று இருந்த்து. இன்று அந்தப்பெண் எந்தப்பாகுபாடும் இல்லாமல்கருவறைவரை சென்று கடவுளைத் தொட்டு வணஙகுகிறாள் என்றால்அதற்குக் காரணம் பங்காரு அடிகளார்தான்.

 பெரியார் போன்று பல சான்றோர் ஏற்றிவைத்த ஜோதி இன்று மென்மேலும் பிரகாசிக்கிறது என்றால், இன்று பங்காரு அடிகளார் மூலம் கடவுளின் பேர் கொண்டு இன்னும் கொஞசம் பெண்ணியக்கதவுகளைத் திறந்து விட்டது என்பதில் எனக்குக் கொஞசம் மகிழ்ச்சி. கடவுள் இல்லை என்ற பெரியார் பிறந்த ஈரோட்டிலேயே,வருடாவருடம் செவ்வாடைப்பெண்கள் பேரணி ஈரோட்டை கலக்குவதைப் பார்த்திருப்பீர்கள். இது எப்படி சாத்தியமாச்சு..பெண்களின் கடவுள் பக்தி என்ற அம்சத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் அடிகளார்.இதுதான் அவர் வெற்றிக்குக் காரணம்.

 வீட்டிலேயே மாதவிலக்கன்று காலகாலமாக தள்ளிவைக்கப்பட்டு எதையும் தொடக்கூடாது என்று ஒதுக்கிவைகப்பட்ட பெண்..... இன்று எந்த நாளாக இருந்தாலும்மருவத்தூர் வரலாம்,..... கடவுளை தொட்டு பூஜை செய்யலாம் .....என்று சொன்னதும் எங்கூருப்பெண்கள் மத்தியில் பெரும் சந்தோசம் ஏற்பட்டது என்று சொல்லலாம். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்தந்த ஊர் மாரியம்மன் கோவில்களில் ஒரு சிறிய இடத்தில் பராசக்தி படத்தைவைத்து பூஜை செய்வார்கள். இன்று அதன் பிரம்மாணடமான வள்ர்ச்சி பிரம்மிக்கவைக்கிறது.

 ஏங்க தெரியாமத்தான் கேட்கிறேன். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறுநீர். மலம் போன்று .....பெண்களுக்கு,.... மாதவிலக்கும் இயற்கையாகவோ அல்லது கடவுளாலோ படைக்கப்பட்டதுதானே, பெண்கள் என்ன எங்களுக்கு வேண்டும் வேண்டும் என்று கொடி பிடித்து வேண்டி விரும்பிப் பெற்றுக் கொண்டார்களா, என்ன..... அந்த சமயங்களில் படும் உடல்வேதனை, வெளியில் செல்லும்போது ஏற்படும் அசவுகரியங்கள், நாடாளும் ராணியாக இருந்தாலும் சரி(ஹிலாரி கிளிண்டனாக இருந்தாலு ம், எங்கூரு கருப்பாயாளாக இருந்தாலும்),,,...அவங்கவளுக்குத்தான் தெரியும்.....வேதனை.....


. போன வருடம் உறவினர்மகள் பெரியவள் ஆனாள். அப்போது அண்டை வீட்டுப்பெண்களும், உறவினர்களும் வந்து மஞ்சள் நீர் ஊற்றினார்கள். அவர்கள் வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் ஒரே பணியாள். அந்த வீட்டுப் பெண்மணியும் வந்து நீர் ஊற்றினார்கள். அதன்பிறகு அவர் வீட்டிற்குச் சென்ற  அந்த அம்மணி செய்த முதல் வேலை. 1. குளித்துவிட்டு வீட்டிற்குள் சென்றது. 2. பணியாளைக் கூப்பிட்டு ஒருவாரத்திற்கு என் வீட்டிற்கு வேலைக்கு வராதே. என்று சொன்னது....அந்தவீடு தீட்டு வீடாம். பணிபெண் அந்த தீட்டை அவர்கள்வீட்டில் இருந்து மூட்டை கட்டிகொண்டு போய் இவங்க வீட்டில் ஒட்ட வைத்துவிடுவாளாம்.....பின்பு அதை அழிக்க்முடியாதாம்.......வீடெல்லாம் தினமும் கழுவணுமாம்.... இது எப்படி இருக்குது...........அந்தப்பணிபெண் ஒரு வாரத்திற்கு அவர்களிடம் இருந்து விடுதலை கிடைத்த்து என்று சந்தோசப்பட்டது வேறு விசயம்.
 மறுபடியும் நான் சொல்லிகொள்கிறேன். நான் அந்தக்கோயிலுக்கு ஒருமுறைதான் போயிருக்கிறேன்.  (எதையும் ஒருமுறை அது எப்படி என்று தெரிந்து கொள்வது என் பழக்கம்)

 எனக்கு அடிகளாரிடம் மரியாதை வரக் காரணம், இருபது வருடங்களுக்கு முன்னால்எங்கள் உறவினர் ஒரு பெரியவர், ....அவரின் மருமகன் இறந்துவிட்டார்.  மகள் மீது அதீதப்பாசம் கொண்ட அந்தப்பெரியவரால் சம்பிரதாயப்படி மகளுக்கு வெள்ளை ஆடை தந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உறவினர்களைத் தடுத்துவிட்டார்.

 அடுத்து அவர் செய்ததுதான் இன்றும் பெருமைக்குரிய விசயம்.மூன்றாவது நாள் பங்காரு அடிகளாரை வரவழைத்து தன் மகளுக்கு செவ்வாடை அணிவித்து என்மகள் சக்தியின் அம்சம் என்று அறிவிக்கச் செய்தார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் எங்கூர்ப்பெண் விதவைகள் வெள்ளை ஆடையிலிருந்து மெல்ல மெல்ல காவி போன்ர வெளிர் ஆடைகள், இன்று எப்போதும் போல் வண்ண ஆடைகள் உடுத்த்தத் தொடங்கினார்கள்.


 தந்தை பெரியாரால் பல வகைகளில் போராட்டங்கள் மூலமும் மேடைபேச்சுக்கள் மூலமும் பேசப்பட்ட பெண்ணியம், அவரின் கடவுள் மறுப்பால் தயங்கியிருந்த பெண்கள், அவர் சொல்வது எல்லாம் ஆண்களுக்கு மட்டும்தான் போல என்று, ஒதுங்கியிருந்த பெண்கள்இன்று அடிகளாரின் கடவுள் பெயரால் கொஞசமாவது உடைத்துக்கொண்டு வெளியேவந்திருக்கிறார்கள் என்றால் இத்ற்கு ஒரு அடிகளாரும், கடவுள் பக்தியும் தேவைப்பட்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்.

.   நமக்கு நாமே பூட்டிகொண்ட  பல விலங்குகளை உடைக்க இன்னும் யாரெல்லாம் வரவேண்டியிருக்குமோ..


டிஸ்கி: இதனால் தெரிவது என்னவெறால்
 தாய்க்குலங்களின் ஆதரவு இருந்தால் எங்கேயும் ஜெயிக்கலாம்......

அது திரைப்படமாக இருந்தாலும் சரி,,,,தேர்தலாக இருந்தாலும் சரி......இது எக்ஸ்ட்ரா பாயிண்ட்.....நோட் த பாயிண்ட்.யுவர் ஆனர்....

Sunday, January 10, 2010

மாமியா ஊரு கொடிவேரிங்கோவ்......


                                                  கொடிவேரி அணை

            என்னக் கட்டிகுடுத்த ஊருங்க....பெரிய டவுனில் இருந்து..??????....பட்டிகாட்டுக்குக்குடுக்கறாங்களேன்னு அழுதுகிட்டுப்ப்போன நானு மலச்சுப்போய் நின்ன இடமுங்க.

           ஈரோடு மாவட்டம்  கோபிசெட்டிபாளயத்தில பஸ்ஸு ஏற்னீங்கன்னா ஒரு பத்துமைல்தாங்க....கொடிவேரி பிரிவுன்னு கண்டக்டர் இறக்கி விட்டிருவாரு.அப்படியே பொடிநடையா ஒரு மைல் நடந்தீங்கன்னா (வேறு வாகன வசதி இல்லீங்கோ....நாயித்துக்கிழமையின்னா மட்டும் ஆட்டோ கிடைக்கும்) அணை வந்துரும்...

          இன்னொரு விசயம் சொல்ல மறந்துட்டனுங்க..கோபியில பஸ்ஸு ஏறயிலியே அரசூர் வழின்னு போட்டிருக்குதான்னு பார்த்துங்க...மாத்தி ஏறிட்டிங்கன்னா ஆத்துக்கு அந்தப்பக்கம் பெரிய கொடிவேரின்னு ஊரு இருக்கு. அங்க கொண்டு விட்டிருவாங்க...அங்கிருந்தும் பார்க்கலாம். இருந்தாலும் எங்கூரில்தான் வசதியா இருக்கும்.பார்க்கெல்லாம் இங்கதான் இருக்கு.

         லீவு நாளானா போதும்...... குஞ்சு குளுவானோடவும், கட்டுச்சோத்து மூட்டையோடும் வந்து இறங்கிருவாங்க......பக்கத்தூரு கம்பெனியில  இருந்தெல்லாம் பசகளும் புள்ளைகளும் பஸ் பஸ்ஸா வந்து இறங்கி சோடி சோடியாச்  சுத்திட்டு இருப்பாங்க

.( இங்க ஓட்டலோ, தங்குமிட வசதியோ கிடையாது.......ஏன்.....உங்கூட்டுல சோறு போட மாட்டிங்களான்னு கேட்காதிங்க.......எங்க பண்ணாடி......அப்பவே விவசாயம் பார்த்தா பொழக்க முடியாதுன்னு..... வேய்க்கானமா .... நாலு எழுத்து படிச்சுப்போட்டு ???????.......உத்தியோகம் பார்க்கிறேன்னு வரக்காட்டுப்பக்கம் வந்துட்டாரு....அப்பப்ப..... ”எங்களுதெல்லாம் கர வழி பூமிடியோவ்”....... அப்ப்டின்னு பெரும பேசறதோட சரி....)..

(அப்பல்லாம் அடிக்கடி ஊருக்குள்ள தண்ணி வந்துருமாம்.ஒருநாள் அப்படி தண்ணி வந்தப்போ கையில கிடைச்சத எல்லாம் வண்டியில் எடுத்துக்கிட்டு எங்க மாமியார் ஓட எங்க பண்ணாடி அவரு புத்தகப்பையைத் தூக்கிட்டு ஓடினாராம்.....??எட்டாவதுவரைதான் அங்க ஸ்கூலு. அப்புறம் ஆறு தாண்டி அக்கறைப்பள்ளிக்கூடத்துக்கு தண்ணீரில் நடந்துதான் போகணும். தண்ணி அதிகமானா பரிசல்.....அப்படிப் படிச்சவர்தாங்க பண்ணாடி......) இன்னும் அப்படித்தான் நிலமை.....பள்ளிகூடமெல்லாம்..முதல் படத்துல பார்க்கிறீர்களே... அந்த சட்டரைப் பிடித்துக்கொண்டுதான் தண்ணீர் குறைவாக இருக்கும் காலங்களில் ஆற்றுக்கு அந்தப்பக்க ஊருக்குப் போக வேண்டும்....


  பாலம் ஒண்ணு கட்டிகுடுக்கச்சொல்லி மக்கள் கேட்டுக்கிட்டுதான் இருக்கிறாங்க.......ஆனா போக்குவரத்து அதிகமானா இந்த இயற்கை அழகு அழிஞ்சு போயிரும்மோன்னு பயம்மாவும் இருக்குதுங்க...........இளங்கோவன் எம்.பி. ரோடெல்லாம் நல்லாப்போட்டுக் குடுத்துட்டாருங்க. அதுக்கொரு நன்றி சொல்லிகிறனுங்க..

.

       அப்புறம்  புதுசாப்புடிச்ச மீனு பொறிச்சுக்குடுப்பாங்க....மீனுன்னுன்னா...அடுத்தது சரக்க யோசிக்காதீங்க.....போலீசு முட்டிக்கு முட்டி பேத்துப்புடுவாங்க....சரக்கடிச்சுட்டு நிறைய பசங்க ஆத்தோட போயிட்டாங்க...அதனால் அனுமதி கிடையாது.

            
                                          அணை முனியப்பன் கோவில்

                  பத்து வருசத்துக்கு முன்னாடி எல்லாம் இவ்வள்வு கூட்டம் இல்ல. அவ்வளவா யாருக்கும் தெரியாது.......நம்ம பாக்கியராசு இருக்காரே......அதாரு... இந்த முந்தானைமுடிச்சு படம் எல்லாம் எடுத்தாரே அவரா....ஆமாங்க அவுருதான் இங்க அடிக்கடி சூட்டிங் எடுப்பாரு. எல்லாப்படத்துலயும் ஒரு சீனாவது எடுப்பாரு.  நம்ம ச்த்தியராசு இங்கிலீசுக்காரன்........படம்......தேவயானி,அப்பாஸ் காதலில் விழுந்தேன்....சின்னத்தம்பிக்காக பிரபு,குஸ்பூ.... எல்லாரும் இங்க வந்து டூயட் பாடி இருக்காங்க....அப்புறம்தான் சனங்க நிறைய வர ஆரம்பிச்சுட்டாங்க.

                “அதெல்லாம் இப்ப.....அதுக்குமுன்னாடியே , இது சத்தியம்னு ஒரு படத்துல சரவணப்பொய்கையில் நீராடி-ன்னு ஒரு பாட்டு வருமே அந்தப்படம்......அன்னக்கிளியெல்லாம் இங்க எடுத்திருக்கிறாங்க”..எல்லா சினிமா இஸ்ஸுட்டாரையும்  நேரிலயே பார்த்திருக்கமாக்கு:......இது எங்க பண்ணாடி.......”..சரிங்க.... சொல்லிட்டேன்”.....                                        குழந்தைகள் விளையாட பார்க்


             அப்புறமா ஆத்துல பரிசல் பயணம் போகலாம். நான் இன்னும் போனதில்லிங்கோ....எங்கூட்டுக்காரர் விட மாட்டேங்கிறார். ஏன்னு  இன்னொரு நாளைக்கு சொல்ரேன்.

          குடும்பத்தோடு வந்திங்கன்னா ஒருநாள் பூராவும் அணையில் குளிச்சுட்டு மீன் சாபிட்ட்டிட்டு, குழந்தையோடு குழந்தையா விளையாடிட்டு சாலியா இருந்துட்டுப்போகலாம்....அப்புறம் நேரம் இருந்தா பண்ணாரியம்மன் கோவில், பவானிசாகர் அணை, தெங்குமராட்டா இதெல்லாம் போகலாம். எல்லாம் போற வழிதான். வாகனம் இருந்திட்டா ரொம்ப சவுகரியம்..

         வந்து பார்த்திட்டு சொல்லுங்க...எப்படின்னு....


   அணையோரம் ஆழ்துயிலில் இருக்கும் என் மாமனார்,மாமியார் சமாதி(கார் பார்க்கிங் அருகில்}.

      தண்ணீர் இல்லாத்போது மாணவர்களும்,மக்களும் உபயோகப்படுத்தும் வழி.
  
     தூரத்தில் சின்னதா தெரியும் வீடு, சின்னத்தம்பியில் பிரபுவின் வீடாக நடித்த வீடு??..


   தண்ணிர் இருக்கும் இடம்தான் பரிசல் பயண்ம்...

சில அழகான் புகைப்படங்கள் கொடுத்ததற்கு கூகுளுக்கு நன்றி.

Monday, January 4, 2010

பெண்ணுக்கு பெண்ணே எதிரி...

பெண்ணுக்கு பெண்ணெஎதிரி.......பல சமயங்களில்........அதிலும் பழய சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதில் சில பெண்கள் இன்னும் மாறாமல் இருக்கிறார்கள்.

       10நாட்களுக்கு முன் பக்கத்து ஊரில் எங்கள் உறவின்ர் திடீர் மாரடைப்பில் இறந்துவிட்டார்.அவர் மனைவி 40வயதுக்குமேல் இருக்கும். ஆனால் இன்னும் இளமை மாறாத தோற்றம் உடையவர்.  அவரைப்பார்க்க மீண்டும் நானும் உறவுப்பெண்கள் சிலரும் போனோம்.பத்து நாட்களுக்குமுன் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பத்ற்கும் பத்துவயது கூடிதெரிந்தார்.துணையை இழந்த சோகம்.......மனதள்வில் மிகவும் பாதிக்கப்ப்ட்டிருந்தார்...... சிறிய வெள்ளைப்பூக்கள் போட்ட சேலையில் ,  வெற்று நெற்றியுடன்அவரை என்னால் கண்கொண்டு பார்க்கமுடியவில்லை.......கொஞச நேர அழுகை, பேச்சுக்களுக்குப்பின் நான் சொன்னேன்.
நான்.................... ”நீங்கள் எப்போதும்போல் இருங்கள்.  இந்த வெள்ளை ஆடை வேண்டாம்.”
கூடவந்தவர்.......” கலர் புடவை வேண்டுமானால் கட்டிகொள். பொட்டு வேண்டாம்.”

கூடவந்த இன்னொருவர், அவரின் உறவினரும் சமீபத்தில்தான் இறந்தார். அவர் மனைவிக்கு இன்னும் சின்னவயது.

அவர்.........”ஆமாம்..பொட்டு வேண்டாம்..... அந்தப்பொண்ணும் பொட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்....... அவர் போனதற்குப்பிறகு எதுவும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டாள்,..... நானும் இப்போது அவளுடன் போகும்போது பொட்டு வைப்பதில்லை”.....என்று சொல்லி மீண்டும் அழுதார்..

நான்.......”அக்கா..இதை அப்படி நினைக்காதீர்கள்.அவர்கள் நாலு இடம் வெளியில் போகவரவேண்டும். இந்தக்கோலத்துடன் போய் விதவை என்று ஏன் வெளிக்காட்ட்வேண்டும்”......அந்தப்பெண்ணையும் வைத்துக்கொள்ளச்சொல்லுங்கள்.....நீங்கள் ஊக்கம் கொடுங்கள்.யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.:” என்றேன்...”..மவுனம்தான் பதில்..

நாங்கள் இப்படிப்பேசும்போதே நாங்கள் பார்க்கச்சென்ற பெண் முகத்தை மூடிகொண்டு பொங்கிபொங்கி அழுதார். என்னால் தாங்கவே முடியவில்லை

ஓரிரு பெண்கள் பொட்டு வைத்துக்கொண்டாலும் அறிந்தவர்கள்அவளை வித்தியாசமாகப்பார்க்கிறார்கள். யாரிடமாவது சிரித்துப்பேசிவிட்டால் அவளை ஒரு ஒழுக்கம் குறைந்த பெண் போன்ற விமர்சனங்களை மறைமுகமாக வைக்கிறார்கள்...அவள் செயலகளை கண்கொத்திப்பாம்புபோல் கண்காணிக்கிறார்கள். மவுனமாக சோகப்போர்வை போர்த்திக்கொண்டிருந்தால்தான் இவர்களுக்கு பிடிக்கும்போல....


 இன்னொரு பெண் ஒருநாள் வெளியில் நின்றுகொண்டிருந்தார்.நான் விசுவின் மக்கள் அரங்கம் இறுதிச்சுற்று தேர்வுக்காக கிளம்பி வெளியில் வந்தேன். எதிரில் என்வீட்டில் துவைக்கும் பெண் வந்தார். அவர் ஒரு விதவை.....நான் நின்றுசாவியைக்கொடுத்துவிட்டுப்போய்விட்டேன்......மாலையில் தேர்வாகாமல் திரும்பிவந்தேன்.........அதற்கு அந்த அம்மாவின் கமெண்ட்.....”.பத்துநாட்களாக ஜெயித்துவந்த நீங்கள், அவளைப்பார்த்துவிட்டுப்போனதால்தான் தோற்றுவிட்டீர்கள்........திரும்பிவந்து தண்ணீர்குடித்துவிட்டு போயிருந்தால் ஜெயித்திருபீர்கள்”.....எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை........”

 ”இல்லை அக்கா.....அது எந்தவறுதான்.........நான் நடுவில் கொஞ்சம் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் திணறிவிட்டேன்.அதனால்தான் ரிஜ்க்ட் ஆகிவிட்டேன்” என்றதும் பேசாமல் இருந்துவிட்டார்.இதுதான் “பழி ஒருபக்கம் ....பாவம் ஒரு பக்கம் என்பது”.

கணவர் இறந்தபிறகு பெரும்பாலும் எந்தப்பெண்களும் மனதளவில் எதிலும் விருப்பமில்லாமல் துறவிகளாகத்தான் வாழ்கிறார்கள்.கூடவே உடன்கட்டை ஏறிவிடமுடியுமா என்ன.....குழந்தைகளை ஆளாக்கிதானே ஆகவேண்டும்.அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்துதானே ஆக வேண்டும்.அதிலும் சின்னவயதுப்பேண்கள் என்றால் வாழ்க்கை பூரா இப்படியே வாழ்ந்து தீர்த்தாகவேண்டுமா. அவளுக்கு என்று ஒரு மன்ம் உணர்வுகள் எதுவும் இருக்காதா....அவளுக்குமகிழ்ச்சியான வாழ்க்கையை கட்டாயம் அளிக்க வேண்டும்... அவளுக்கு மறுதிருமணம் செய்வது நல்லது.

முன்பெல்லாம் 10நாள் கல்யணம் என்று சொல்வார்கள். இப்போது இரண்டுநாள் திருமணம் ஆகி, அதுவும் இப்போது ஒரெநாளில்திருமணம் ரிசப்சன் என்று மாறிவிட்டது.சீர் எதுவும் செய்வதில்லை.....எல்லாம் மாறிவிட்டது....

ஆனால் இறப்பிற்குமட்டும் செய்யும் அந்த பழய சம்பிராதாங்களை மட்டும் ஏன் பிடித்து தொங்க்கிகொண்டு இருக்கவேண்டும். .....” வெள்ளைப்புடவை...நடுராத்திரியில் சில விதவைப்பெண்கள் அந்தப்பெண்ணின் மாங்கல்யத்தைக் கழட்டுவது.” என்று........  கடும் சோகத்தில் இருக்கும் பெண்ணை மீண்டும் தூள்தூளாக நொறுங்கிபோகவைக்காதா?.......இது தேவையா...

வீட்டிற்கு வந்து என்கணவரிடம் சொன்னதும் அவர்....”இதை ஆண்கள் யாராவது சொன்னமா.......நீங்கள்தானே சொன்னீர்கள்.....அந்தக்காவும், அவர் தம்பி மனைவியும் அவர் இறந்தபிறகு சாப்பிடவில்லையா....தூங்கவில்லையா...என்ன நின்றுவிட்டது....பொட்டு என்ன பாவம் செய்தது” பெண்ணுக்கு பெண்தான்எதிரி” என்றார்......

அவர் சொன்னது எனக்கு சரியாக இருந்தாலும் ....”உங்கள் மாதிரி ஆண்வர்க்கங்கள் முதலில் ஏற்படுத்திக்கொடுத்ததைத்தான்  இப்போது இன்னும் இவர்கள் செய்கிறார்கள்” என்று ஒரு பிடிபிடித்தேன்.

எந்தச்சம்பிராதயங்களாக இருந்தாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான்........அதில் ஒருதரப்பை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை....அதை மாற்றுவதில் இருபாலாரும் சேர்ந்துதான் செயல்படவேண்டும்....இல்லாவிட்டால் ”இன்று  நான்...நாளை நீ....” என்பது பெண்களுக்கு மட்டும் தொடர்கதை ஆகிவிடும்.

டிஸ்கி: புலிகேசி....நான் எழுத இருந்ததை நீங்கள் முந்திக்கிட்டாலும்....அந்தப்பெண்ணின்  யுகங்கள் தாண்டிய கண்ணீர்.............நீங்கள்தான் தூண்டுகோள். நன்றி புலவரே....