ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Thursday, January 21, 2010

பெரியாரும், பங்காரு அடிகளாரும், பெண்ணியமும்......

பங்காரு அடிகளாரின் சக்தி பீடமும் அவருடைய அருள்வாக்கைப்பற்றியும் அங்குவரும் பெண் பெண்பகதர்களின் பக்தியைப் பற்றியும் நான் இங்கு சொல்லவில்லை.அவருக்கு துதிபாடவும் நான் வரவில்லை.....அவரின்மிகப்பெரும் வெற்றிக்குக் காரணம் பெண்களின் மீது விதிக்கப்பட்டிருந்த சில தடைகளை உடைத்ததும்,...பெண்கள் சக்தியும்தான் காரணம் என்பேன்......

 சுமார் முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் மிகவும் எளிமையாக இருந்த இயக்கம் , ஆதிபராசக்தி கோயில் இன்று கல்லூரிகளாக விரிவானது முதல், காங்கிரஸ் மேடையில். ராஜீவ் காந்தியோடு அமரவைக்கப்பட்டதுவரை அவரின் மிகபெரும் வெற்றிகளுக்கெல்லாம் காரணம் பெண்கள்தான் என்பதை அவரே மறுக்கமாட்டார்.

 இன்றுகாலை அருகில் உள்ள  காய்கறிக்கடைக்குச்சென்றேன்.ரோட்டோரப்பெட்டிக்கடை அது. வண்ணம் அடிக்கப்பட்டு முன்புறம் சாணம் கொண்டு மெழுகி பளிச்சென்று இருந்த்து.கடைக்காரபெண் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்... அந்தப்பெண் மருவத்தூர் செல்ல சக்தி மாலை அணிந்திருந்தார். பார்க்கவே சந்தோசமாக இருந்த்து. ஒரு காலத்தில் அந்தப்பெண்ணிடம் பலர் காய்கறி வாங்கவே தயங்கிய காலம் ஒன்று இருந்த்து. இன்று அந்தப்பெண் எந்தப்பாகுபாடும் இல்லாமல்கருவறைவரை சென்று கடவுளைத் தொட்டு வணஙகுகிறாள் என்றால்அதற்குக் காரணம் பங்காரு அடிகளார்தான்.

 பெரியார் போன்று பல சான்றோர் ஏற்றிவைத்த ஜோதி இன்று மென்மேலும் பிரகாசிக்கிறது என்றால், இன்று பங்காரு அடிகளார் மூலம் கடவுளின் பேர் கொண்டு இன்னும் கொஞசம் பெண்ணியக்கதவுகளைத் திறந்து விட்டது என்பதில் எனக்குக் கொஞசம் மகிழ்ச்சி. கடவுள் இல்லை என்ற பெரியார் பிறந்த ஈரோட்டிலேயே,வருடாவருடம் செவ்வாடைப்பெண்கள் பேரணி ஈரோட்டை கலக்குவதைப் பார்த்திருப்பீர்கள். இது எப்படி சாத்தியமாச்சு..பெண்களின் கடவுள் பக்தி என்ற அம்சத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் அடிகளார்.இதுதான் அவர் வெற்றிக்குக் காரணம்.

 வீட்டிலேயே மாதவிலக்கன்று காலகாலமாக தள்ளிவைக்கப்பட்டு எதையும் தொடக்கூடாது என்று ஒதுக்கிவைகப்பட்ட பெண்..... இன்று எந்த நாளாக இருந்தாலும்மருவத்தூர் வரலாம்,..... கடவுளை தொட்டு பூஜை செய்யலாம் .....என்று சொன்னதும் எங்கூருப்பெண்கள் மத்தியில் பெரும் சந்தோசம் ஏற்பட்டது என்று சொல்லலாம். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்தந்த ஊர் மாரியம்மன் கோவில்களில் ஒரு சிறிய இடத்தில் பராசக்தி படத்தைவைத்து பூஜை செய்வார்கள். இன்று அதன் பிரம்மாணடமான வள்ர்ச்சி பிரம்மிக்கவைக்கிறது.

 ஏங்க தெரியாமத்தான் கேட்கிறேன். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறுநீர். மலம் போன்று .....பெண்களுக்கு,.... மாதவிலக்கும் இயற்கையாகவோ அல்லது கடவுளாலோ படைக்கப்பட்டதுதானே, பெண்கள் என்ன எங்களுக்கு வேண்டும் வேண்டும் என்று கொடி பிடித்து வேண்டி விரும்பிப் பெற்றுக் கொண்டார்களா, என்ன..... அந்த சமயங்களில் படும் உடல்வேதனை, வெளியில் செல்லும்போது ஏற்படும் அசவுகரியங்கள், நாடாளும் ராணியாக இருந்தாலும் சரி(ஹிலாரி கிளிண்டனாக இருந்தாலு ம், எங்கூரு கருப்பாயாளாக இருந்தாலும்),,,...அவங்கவளுக்குத்தான் தெரியும்.....வேதனை.....


. போன வருடம் உறவினர்மகள் பெரியவள் ஆனாள். அப்போது அண்டை வீட்டுப்பெண்களும், உறவினர்களும் வந்து மஞ்சள் நீர் ஊற்றினார்கள். அவர்கள் வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் ஒரே பணியாள். அந்த வீட்டுப் பெண்மணியும் வந்து நீர் ஊற்றினார்கள். அதன்பிறகு அவர் வீட்டிற்குச் சென்ற  அந்த அம்மணி செய்த முதல் வேலை. 1. குளித்துவிட்டு வீட்டிற்குள் சென்றது. 2. பணியாளைக் கூப்பிட்டு ஒருவாரத்திற்கு என் வீட்டிற்கு வேலைக்கு வராதே. என்று சொன்னது....அந்தவீடு தீட்டு வீடாம். பணிபெண் அந்த தீட்டை அவர்கள்வீட்டில் இருந்து மூட்டை கட்டிகொண்டு போய் இவங்க வீட்டில் ஒட்ட வைத்துவிடுவாளாம்.....பின்பு அதை அழிக்க்முடியாதாம்.......வீடெல்லாம் தினமும் கழுவணுமாம்.... இது எப்படி இருக்குது...........அந்தப்பணிபெண் ஒரு வாரத்திற்கு அவர்களிடம் இருந்து விடுதலை கிடைத்த்து என்று சந்தோசப்பட்டது வேறு விசயம்.
 மறுபடியும் நான் சொல்லிகொள்கிறேன். நான் அந்தக்கோயிலுக்கு ஒருமுறைதான் போயிருக்கிறேன்.  (எதையும் ஒருமுறை அது எப்படி என்று தெரிந்து கொள்வது என் பழக்கம்)

 எனக்கு அடிகளாரிடம் மரியாதை வரக் காரணம், இருபது வருடங்களுக்கு முன்னால்எங்கள் உறவினர் ஒரு பெரியவர், ....அவரின் மருமகன் இறந்துவிட்டார்.  மகள் மீது அதீதப்பாசம் கொண்ட அந்தப்பெரியவரால் சம்பிரதாயப்படி மகளுக்கு வெள்ளை ஆடை தந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உறவினர்களைத் தடுத்துவிட்டார்.

 அடுத்து அவர் செய்ததுதான் இன்றும் பெருமைக்குரிய விசயம்.மூன்றாவது நாள் பங்காரு அடிகளாரை வரவழைத்து தன் மகளுக்கு செவ்வாடை அணிவித்து என்மகள் சக்தியின் அம்சம் என்று அறிவிக்கச் செய்தார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் எங்கூர்ப்பெண் விதவைகள் வெள்ளை ஆடையிலிருந்து மெல்ல மெல்ல காவி போன்ர வெளிர் ஆடைகள், இன்று எப்போதும் போல் வண்ண ஆடைகள் உடுத்த்தத் தொடங்கினார்கள்.


 தந்தை பெரியாரால் பல வகைகளில் போராட்டங்கள் மூலமும் மேடைபேச்சுக்கள் மூலமும் பேசப்பட்ட பெண்ணியம், அவரின் கடவுள் மறுப்பால் தயங்கியிருந்த பெண்கள், அவர் சொல்வது எல்லாம் ஆண்களுக்கு மட்டும்தான் போல என்று, ஒதுங்கியிருந்த பெண்கள்இன்று அடிகளாரின் கடவுள் பெயரால் கொஞசமாவது உடைத்துக்கொண்டு வெளியேவந்திருக்கிறார்கள் என்றால் இத்ற்கு ஒரு அடிகளாரும், கடவுள் பக்தியும் தேவைப்பட்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்.

.   நமக்கு நாமே பூட்டிகொண்ட  பல விலங்குகளை உடைக்க இன்னும் யாரெல்லாம் வரவேண்டியிருக்குமோ..


டிஸ்கி: இதனால் தெரிவது என்னவெறால்
 தாய்க்குலங்களின் ஆதரவு இருந்தால் எங்கேயும் ஜெயிக்கலாம்......

அது திரைப்படமாக இருந்தாலும் சரி,,,,தேர்தலாக இருந்தாலும் சரி......இது எக்ஸ்ட்ரா பாயிண்ட்.....நோட் த பாயிண்ட்.யுவர் ஆனர்....





Sunday, January 10, 2010

மாமியா ஊரு கொடிவேரிங்கோவ்......






                                                  கொடிவேரி அணை

            என்னக் கட்டிகுடுத்த ஊருங்க....பெரிய டவுனில் இருந்து..??????....பட்டிகாட்டுக்குக்குடுக்கறாங்களேன்னு அழுதுகிட்டுப்ப்போன நானு மலச்சுப்போய் நின்ன இடமுங்க.

           ஈரோடு மாவட்டம்  கோபிசெட்டிபாளயத்தில பஸ்ஸு ஏற்னீங்கன்னா ஒரு பத்துமைல்தாங்க....கொடிவேரி பிரிவுன்னு கண்டக்டர் இறக்கி விட்டிருவாரு.அப்படியே பொடிநடையா ஒரு மைல் நடந்தீங்கன்னா (வேறு வாகன வசதி இல்லீங்கோ....நாயித்துக்கிழமையின்னா மட்டும் ஆட்டோ கிடைக்கும்) அணை வந்துரும்...

          இன்னொரு விசயம் சொல்ல மறந்துட்டனுங்க..கோபியில பஸ்ஸு ஏறயிலியே அரசூர் வழின்னு போட்டிருக்குதான்னு பார்த்துங்க...மாத்தி ஏறிட்டிங்கன்னா ஆத்துக்கு அந்தப்பக்கம் பெரிய கொடிவேரின்னு ஊரு இருக்கு. அங்க கொண்டு விட்டிருவாங்க...அங்கிருந்தும் பார்க்கலாம். இருந்தாலும் எங்கூரில்தான் வசதியா இருக்கும்.பார்க்கெல்லாம் இங்கதான் இருக்கு.

         லீவு நாளானா போதும்...... குஞ்சு குளுவானோடவும், கட்டுச்சோத்து மூட்டையோடும் வந்து இறங்கிருவாங்க......பக்கத்தூரு கம்பெனியில  இருந்தெல்லாம் பசகளும் புள்ளைகளும் பஸ் பஸ்ஸா வந்து இறங்கி சோடி சோடியாச்  சுத்திட்டு இருப்பாங்க

.( இங்க ஓட்டலோ, தங்குமிட வசதியோ கிடையாது.......ஏன்.....உங்கூட்டுல சோறு போட மாட்டிங்களான்னு கேட்காதிங்க.......எங்க பண்ணாடி......அப்பவே விவசாயம் பார்த்தா பொழக்க முடியாதுன்னு..... வேய்க்கானமா .... நாலு எழுத்து படிச்சுப்போட்டு ???????.......உத்தியோகம் பார்க்கிறேன்னு வரக்காட்டுப்பக்கம் வந்துட்டாரு....அப்பப்ப..... ”எங்களுதெல்லாம் கர வழி பூமிடியோவ்”....... அப்ப்டின்னு பெரும பேசறதோட சரி....)..

(அப்பல்லாம் அடிக்கடி ஊருக்குள்ள தண்ணி வந்துருமாம்.ஒருநாள் அப்படி தண்ணி வந்தப்போ கையில கிடைச்சத எல்லாம் வண்டியில் எடுத்துக்கிட்டு எங்க மாமியார் ஓட எங்க பண்ணாடி அவரு புத்தகப்பையைத் தூக்கிட்டு ஓடினாராம்.....??எட்டாவதுவரைதான் அங்க ஸ்கூலு. அப்புறம் ஆறு தாண்டி அக்கறைப்பள்ளிக்கூடத்துக்கு தண்ணீரில் நடந்துதான் போகணும். தண்ணி அதிகமானா பரிசல்.....அப்படிப் படிச்சவர்தாங்க பண்ணாடி......) இன்னும் அப்படித்தான் நிலமை.....பள்ளிகூடமெல்லாம்..முதல் படத்துல பார்க்கிறீர்களே... அந்த சட்டரைப் பிடித்துக்கொண்டுதான் தண்ணீர் குறைவாக இருக்கும் காலங்களில் ஆற்றுக்கு அந்தப்பக்க ஊருக்குப் போக வேண்டும்....


  பாலம் ஒண்ணு கட்டிகுடுக்கச்சொல்லி மக்கள் கேட்டுக்கிட்டுதான் இருக்கிறாங்க.......ஆனா போக்குவரத்து அதிகமானா இந்த இயற்கை அழகு அழிஞ்சு போயிரும்மோன்னு பயம்மாவும் இருக்குதுங்க...........இளங்கோவன் எம்.பி. ரோடெல்லாம் நல்லாப்போட்டுக் குடுத்துட்டாருங்க. அதுக்கொரு நன்றி சொல்லிகிறனுங்க..

.

       அப்புறம்  புதுசாப்புடிச்ச மீனு பொறிச்சுக்குடுப்பாங்க....மீனுன்னுன்னா...அடுத்தது சரக்க யோசிக்காதீங்க.....போலீசு முட்டிக்கு முட்டி பேத்துப்புடுவாங்க....சரக்கடிச்சுட்டு நிறைய பசங்க ஆத்தோட போயிட்டாங்க...அதனால் அனுமதி கிடையாது.

            
                                          அணை முனியப்பன் கோவில்

                  பத்து வருசத்துக்கு முன்னாடி எல்லாம் இவ்வள்வு கூட்டம் இல்ல. அவ்வளவா யாருக்கும் தெரியாது.......நம்ம பாக்கியராசு இருக்காரே......அதாரு... இந்த முந்தானைமுடிச்சு படம் எல்லாம் எடுத்தாரே அவரா....ஆமாங்க அவுருதான் இங்க அடிக்கடி சூட்டிங் எடுப்பாரு. எல்லாப்படத்துலயும் ஒரு சீனாவது எடுப்பாரு.  நம்ம ச்த்தியராசு இங்கிலீசுக்காரன்........படம்......தேவயானி,அப்பாஸ் காதலில் விழுந்தேன்....சின்னத்தம்பிக்காக பிரபு,குஸ்பூ.... எல்லாரும் இங்க வந்து டூயட் பாடி இருக்காங்க....அப்புறம்தான் சனங்க நிறைய வர ஆரம்பிச்சுட்டாங்க.

                “அதெல்லாம் இப்ப.....அதுக்குமுன்னாடியே , இது சத்தியம்னு ஒரு படத்துல சரவணப்பொய்கையில் நீராடி-ன்னு ஒரு பாட்டு வருமே அந்தப்படம்......அன்னக்கிளியெல்லாம் இங்க எடுத்திருக்கிறாங்க”..எல்லா சினிமா இஸ்ஸுட்டாரையும்  நேரிலயே பார்த்திருக்கமாக்கு:......இது எங்க பண்ணாடி.......”..சரிங்க.... சொல்லிட்டேன்”.....



                                        குழந்தைகள் விளையாட பார்க்


             அப்புறமா ஆத்துல பரிசல் பயணம் போகலாம். நான் இன்னும் போனதில்லிங்கோ....எங்கூட்டுக்காரர் விட மாட்டேங்கிறார். ஏன்னு  இன்னொரு நாளைக்கு சொல்ரேன்.

          குடும்பத்தோடு வந்திங்கன்னா ஒருநாள் பூராவும் அணையில் குளிச்சுட்டு மீன் சாபிட்ட்டிட்டு, குழந்தையோடு குழந்தையா விளையாடிட்டு சாலியா இருந்துட்டுப்போகலாம்....அப்புறம் நேரம் இருந்தா பண்ணாரியம்மன் கோவில், பவானிசாகர் அணை, தெங்குமராட்டா இதெல்லாம் போகலாம். எல்லாம் போற வழிதான். வாகனம் இருந்திட்டா ரொம்ப சவுகரியம்..

         வந்து பார்த்திட்டு சொல்லுங்க...எப்படின்னு....


   அணையோரம் ஆழ்துயிலில் இருக்கும் என் மாமனார்,மாமியார் சமாதி(கார் பார்க்கிங் அருகில்}.

      தண்ணீர் இல்லாத்போது மாணவர்களும்,மக்களும் உபயோகப்படுத்தும் வழி.
  
     தூரத்தில் சின்னதா தெரியும் வீடு, சின்னத்தம்பியில் பிரபுவின் வீடாக நடித்த வீடு??..


   தண்ணிர் இருக்கும் இடம்தான் பரிசல் பயண்ம்...

சில அழகான் புகைப்படங்கள் கொடுத்ததற்கு கூகுளுக்கு நன்றி.

Monday, January 4, 2010

பெண்ணுக்கு பெண்ணே எதிரி...





பெண்ணுக்கு பெண்ணெஎதிரி.......பல சமயங்களில்........அதிலும் பழய சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதில் சில பெண்கள் இன்னும் மாறாமல் இருக்கிறார்கள்.

       10நாட்களுக்கு முன் பக்கத்து ஊரில் எங்கள் உறவின்ர் திடீர் மாரடைப்பில் இறந்துவிட்டார்.அவர் மனைவி 40வயதுக்குமேல் இருக்கும். ஆனால் இன்னும் இளமை மாறாத தோற்றம் உடையவர்.  அவரைப்பார்க்க மீண்டும் நானும் உறவுப்பெண்கள் சிலரும் போனோம்.பத்து நாட்களுக்குமுன் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பத்ற்கும் பத்துவயது கூடிதெரிந்தார்.துணையை இழந்த சோகம்.......மனதள்வில் மிகவும் பாதிக்கப்ப்ட்டிருந்தார்...... சிறிய வெள்ளைப்பூக்கள் போட்ட சேலையில் ,  வெற்று நெற்றியுடன்அவரை என்னால் கண்கொண்டு பார்க்கமுடியவில்லை.......கொஞச நேர அழுகை, பேச்சுக்களுக்குப்பின் நான் சொன்னேன்.
நான்.................... ”நீங்கள் எப்போதும்போல் இருங்கள்.  இந்த வெள்ளை ஆடை வேண்டாம்.”
கூடவந்தவர்.......” கலர் புடவை வேண்டுமானால் கட்டிகொள். பொட்டு வேண்டாம்.”

கூடவந்த இன்னொருவர், அவரின் உறவினரும் சமீபத்தில்தான் இறந்தார். அவர் மனைவிக்கு இன்னும் சின்னவயது.

அவர்.........”ஆமாம்..பொட்டு வேண்டாம்..... அந்தப்பொண்ணும் பொட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்....... அவர் போனதற்குப்பிறகு எதுவும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டாள்,..... நானும் இப்போது அவளுடன் போகும்போது பொட்டு வைப்பதில்லை”.....என்று சொல்லி மீண்டும் அழுதார்..

நான்.......”அக்கா..இதை அப்படி நினைக்காதீர்கள்.அவர்கள் நாலு இடம் வெளியில் போகவரவேண்டும். இந்தக்கோலத்துடன் போய் விதவை என்று ஏன் வெளிக்காட்ட்வேண்டும்”......அந்தப்பெண்ணையும் வைத்துக்கொள்ளச்சொல்லுங்கள்.....நீங்கள் ஊக்கம் கொடுங்கள்.யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.:” என்றேன்...”..மவுனம்தான் பதில்..

நாங்கள் இப்படிப்பேசும்போதே நாங்கள் பார்க்கச்சென்ற பெண் முகத்தை மூடிகொண்டு பொங்கிபொங்கி அழுதார். என்னால் தாங்கவே முடியவில்லை

ஓரிரு பெண்கள் பொட்டு வைத்துக்கொண்டாலும் அறிந்தவர்கள்அவளை வித்தியாசமாகப்பார்க்கிறார்கள். யாரிடமாவது சிரித்துப்பேசிவிட்டால் அவளை ஒரு ஒழுக்கம் குறைந்த பெண் போன்ற விமர்சனங்களை மறைமுகமாக வைக்கிறார்கள்...அவள் செயலகளை கண்கொத்திப்பாம்புபோல் கண்காணிக்கிறார்கள். மவுனமாக சோகப்போர்வை போர்த்திக்கொண்டிருந்தால்தான் இவர்களுக்கு பிடிக்கும்போல....


 இன்னொரு பெண் ஒருநாள் வெளியில் நின்றுகொண்டிருந்தார்.நான் விசுவின் மக்கள் அரங்கம் இறுதிச்சுற்று தேர்வுக்காக கிளம்பி வெளியில் வந்தேன். எதிரில் என்வீட்டில் துவைக்கும் பெண் வந்தார். அவர் ஒரு விதவை.....நான் நின்றுசாவியைக்கொடுத்துவிட்டுப்போய்விட்டேன்......மாலையில் தேர்வாகாமல் திரும்பிவந்தேன்.........அதற்கு அந்த அம்மாவின் கமெண்ட்.....”.பத்துநாட்களாக ஜெயித்துவந்த நீங்கள், அவளைப்பார்த்துவிட்டுப்போனதால்தான் தோற்றுவிட்டீர்கள்........திரும்பிவந்து தண்ணீர்குடித்துவிட்டு போயிருந்தால் ஜெயித்திருபீர்கள்”.....எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை........”

 ”இல்லை அக்கா.....அது எந்தவறுதான்.........நான் நடுவில் கொஞ்சம் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் திணறிவிட்டேன்.அதனால்தான் ரிஜ்க்ட் ஆகிவிட்டேன்” என்றதும் பேசாமல் இருந்துவிட்டார்.இதுதான் “பழி ஒருபக்கம் ....பாவம் ஒரு பக்கம் என்பது”.

கணவர் இறந்தபிறகு பெரும்பாலும் எந்தப்பெண்களும் மனதளவில் எதிலும் விருப்பமில்லாமல் துறவிகளாகத்தான் வாழ்கிறார்கள்.கூடவே உடன்கட்டை ஏறிவிடமுடியுமா என்ன.....குழந்தைகளை ஆளாக்கிதானே ஆகவேண்டும்.அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்துதானே ஆக வேண்டும்.அதிலும் சின்னவயதுப்பேண்கள் என்றால் வாழ்க்கை பூரா இப்படியே வாழ்ந்து தீர்த்தாகவேண்டுமா. அவளுக்கு என்று ஒரு மன்ம் உணர்வுகள் எதுவும் இருக்காதா....அவளுக்குமகிழ்ச்சியான வாழ்க்கையை கட்டாயம் அளிக்க வேண்டும்... அவளுக்கு மறுதிருமணம் செய்வது நல்லது.

முன்பெல்லாம் 10நாள் கல்யணம் என்று சொல்வார்கள். இப்போது இரண்டுநாள் திருமணம் ஆகி, அதுவும் இப்போது ஒரெநாளில்திருமணம் ரிசப்சன் என்று மாறிவிட்டது.சீர் எதுவும் செய்வதில்லை.....எல்லாம் மாறிவிட்டது....

ஆனால் இறப்பிற்குமட்டும் செய்யும் அந்த பழய சம்பிராதாங்களை மட்டும் ஏன் பிடித்து தொங்க்கிகொண்டு இருக்கவேண்டும். .....” வெள்ளைப்புடவை...நடுராத்திரியில் சில விதவைப்பெண்கள் அந்தப்பெண்ணின் மாங்கல்யத்தைக் கழட்டுவது.” என்று........  கடும் சோகத்தில் இருக்கும் பெண்ணை மீண்டும் தூள்தூளாக நொறுங்கிபோகவைக்காதா?.......இது தேவையா...

வீட்டிற்கு வந்து என்கணவரிடம் சொன்னதும் அவர்....”இதை ஆண்கள் யாராவது சொன்னமா.......நீங்கள்தானே சொன்னீர்கள்.....அந்தக்காவும், அவர் தம்பி மனைவியும் அவர் இறந்தபிறகு சாப்பிடவில்லையா....தூங்கவில்லையா...என்ன நின்றுவிட்டது....பொட்டு என்ன பாவம் செய்தது” பெண்ணுக்கு பெண்தான்எதிரி” என்றார்......

அவர் சொன்னது எனக்கு சரியாக இருந்தாலும் ....”உங்கள் மாதிரி ஆண்வர்க்கங்கள் முதலில் ஏற்படுத்திக்கொடுத்ததைத்தான்  இப்போது இன்னும் இவர்கள் செய்கிறார்கள்” என்று ஒரு பிடிபிடித்தேன்.

எந்தச்சம்பிராதயங்களாக இருந்தாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான்........அதில் ஒருதரப்பை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை....அதை மாற்றுவதில் இருபாலாரும் சேர்ந்துதான் செயல்படவேண்டும்....இல்லாவிட்டால் ”இன்று  நான்...நாளை நீ....” என்பது பெண்களுக்கு மட்டும் தொடர்கதை ஆகிவிடும்.

டிஸ்கி: புலிகேசி....நான் எழுத இருந்ததை நீங்கள் முந்திக்கிட்டாலும்....அந்தப்பெண்ணின்  யுகங்கள் தாண்டிய கண்ணீர்.............நீங்கள்தான் தூண்டுகோள். நன்றி புலவரே....